Connect with us

இந்தியா

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்தும் மெகா சர்வே…எதற்காக?

Published

on

Loading

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்தும் மெகா சர்வே…எதற்காக?

வைபை ஆன் செய்ததும் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் ஈரோடு பயணம் குறித்து கொடுத்த பேட்டி இன்பாக்ஸில் வந்து விழுந்தது.

அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

Advertisement

“டிசம்பர் 19, 20 தேதிகளில் ஈரோட்டுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், தனது ஈரோடு பயணம் குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

‘நாங்கள் 200 தொகுதிகளில் வெல்வோம் என்று சொல்லி வருகிறோம். ஆனால், ஈரோடு பயணத்துக்கு பிறகு 200-க்கும் அதிகமான இடங்களில் வெல்வோம் என்ற உணர்வு ஏற்பட்டிருக்கிறது’ என்று தெரிவித்து இருக்கிறார்.

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் இன்னமும் எந்த ஒரு தெளிவான வியூகத்துக்கும் வராத நிலையில்… ஆளுங்கட்சியான திமுக கூட்டணி 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவது என்ற ஒற்றை வியூகத்தை வைத்து அதற்கான அத்தனை வேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

Advertisement

இதற்காகவே தலைமைச் செயலாளர், காவல்துறையின் முக்கிய உயரதிகாரிகள், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அவ்வப்போது ஆலோசனை நடத்தி முதல்வரிடம் சில யோசனைகளை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், முதல்வரின் அறிவுறுத்தலுக்கு இணங்க தமிழகம் முழுதும் மக்களின் மனநிலையை அறிய மெகா சர்வே ஒன்று துவக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் உள்ள மாநகரம், நகரம், பேரூர், கிராமம் என்று அனைத்து பகுதிகளிலும் இந்த சர்வே தொடங்கியிருக்கிறது.

Advertisement

தமிழக அரசு நிறைய திட்டங்களை அமல்படுத்தியிருக்கிறார்கள். இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மகளிருக்கு இலவச பஸ் பயணம், மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் என்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சர்வே டீம் ஒவ்வொரு வீடாக சென்று இந்த ஆட்சி எப்படி இருக்கிறது? இந்த ஆட்சியில் எந்தத் திட்டத்தால் நீங்கள் பலன் பெறுகிறீர்கள்? வேறு என்ன திட்டம் வேண்டும்? என்ன குறை இருக்கிறது? என்பன உள்ளிட்ட 10 கேள்விகளோடு மக்களை சந்தித்து அவர்களது பதில்களை பெறுகிறது.

இந்த சர்வே முடிவுகள் ஒவ்வொரு பகுதியாக உடனுக்குடன் தொகுக்கப்படுகிறது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாரியாக சர்வே முடிவுகள் புள்ளி விவரங்களோடு தயாரிக்கப்படுகின்றன.

Advertisement

பெரும்பான்மையாக உள்ள சமுதாயத்தினர் என்ன சொல்கிறார்கள், பெண்கள் என்ன சொல்கிறார்கள் என்று பல கோணங்களிலும் இந்த சர்வே எடுக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமான சர்வே முடிவுகள் அங்குலம் அங்குலமாக தயாரிக்கப்பட்டு வரும் மார்ச் மாதத்துக்குள் முதல்வரிடம் அளிக்கப்படும்.

இந்த சர்வேயில் தெரிவிக்கப்படும் விவரங்களின் அடிப்படையில் வரும் 2026 தமிழக பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்க்கும் புதிய அறிவிப்புகள், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் விரிவாக்கங்கள் ஆகியவை இருக்கும் என்கிறார்கள்.

2025 பட்ஜெட் தான் திமுக அரசின் கடைசி முழு பட்ஜெட்டாக இருக்கும். அதாவது 2025 பட்ஜெட்தான் தேர்தல் பட்ஜெட் ஆக இருக்கும். எனவே, அந்த பட்ஜெட்டில் மக்களின் மனதைக் கவரும் குறிப்பாக பெண்களின் மனதைக் கவரும் திட்டங்களைத் தீட்டுவதற்காகத்தான் மாநிலம் தழுவிய இந்த மெகா சர்வே என்கிறார்கள்.

Advertisement

தேர்தலுக்கு மட்டுமல்ல, வரும் ஆண்டுக்கான தேர்தல் பட்ஜெட்டுக்கும் தீவிரமாக தயாராகிவிட்டார் முதல்வர் ஸ்டாலின்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன