இந்தியா
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேர்வு; யூஜிசி உறுப்பினரை சேர்க்க ஆளுநர் அறிவுறுத்தல்

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேர்வு; யூஜிசி உறுப்பினரை சேர்க்க ஆளுநர் அறிவுறுத்தல்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக தமிழ்நாடு அரசு அமைத்துள்ள தேடுதல் குழுவில், யூஜிசி பிரதிநிதி இல்லாததால், அந்தக் குழுவை கலைத்து, புதிய குழுவை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ரவி அறிவுறுத்தி இருந்தார். ஆனால், மாநில அரசின் சட்டங்களுக்கு உட்பட்டுதான் தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வு செய்ய யூஜிசி உறுப்பினரையும் சேர்த்து தேடுதல் குழுவை அமைத்திட வேண்டும் என்று ஆளுநர் ரவி மீண்டும் அறிவுறுத்தியுள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வுசெய்வதற்கான தேடுதல் குழுவில் யூஜிசி உறுப்பினரை சேர்க்க வேண்டியது கட்டாயம் என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். உண்மைக்கு மாறான, தவறான தகவல்களை உயர்கல்வித் துறை அமைச்சர் வெளியிட்டுள்ளதாகவும் ஆளுநர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே சென்னை அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை நியமிப்பது தொடர்பான தேடுதல் குழுக்களை மாற்றி அமைக்க வேண்டும் என ஆளுநர் மீண்டும் அறிவுறுத்தியுள்ளார்.