இந்தியா
முடிவடைந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர்; நிறைவேறிய முக்கிய தீர்மானம்

முடிவடைந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர்; நிறைவேறிய முக்கிய தீர்மானம்
“ஒரே நாடு ஒரே தேர்தல்” தொடர்பான மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்புவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றிய பிறகு, நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக, 121 ஆவது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தை சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேகவால் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மசோதாக்கள் குறித்து ஆய்வு செய்வதற்கு 39 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் இருந்து 27 பேரும், மாநிலங்களவையில் இருந்து 12 பேரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
பாஜக எம்.பி. பி.பி. சவுத்ரி தலைமையிலான இக்குழுவில், பிரியங்கா காந்தி, டி.எம். செல்வகணபதி, மணிஷ் திவாரி, சுப்ரியா சுலே, ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே, அனுராக் தாகூர் உள்ளிட்டோர் அங்கம் வகிக்கின்றனர்.
இதேபோன்று, மாநிலங்களவையைப் பொறுத்தவரை, திமுக எம்.பி. வில்சன், கன்ஷ்யாம் திவாரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
“ஒரே நாடு ஒரே தேர்தல்” தொடர்பான மசோதாக்களை ஆய்வு செய்து, அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தின் கடைசி வாரத்தின் முதல் நாளில் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.