இந்தியா
450 மாணவர்களின் கல்வி கேள்விக்குறி; பள்ளி நிர்வாகத்தின் திடீர் முடிவால் பெற்றோர் ஆத்திரம்

450 மாணவர்களின் கல்வி கேள்விக்குறி; பள்ளி நிர்வாகத்தின் திடீர் முடிவால் பெற்றோர் ஆத்திரம்
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கீழ் 50 ஆண்டுகளுக்கு மேலாக திவான் முகமது மெமோரியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் திடீரென பள்ளி நிர்வாகம் பெற்றோர்களை அழைத்து, தங்களுடைய குழந்தைகளை வேறொரு பள்ளியில் சேர்த்து விடுங்கள் என்று கூறியிருக்கிறது. மேலும் வருகின்ற 31ஆம் தேதிக்குள் பள்ளி மூடப்படும், அதற்குள் தங்கள் பிள்ளைகளை வேறொரு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளது.
இதன் காரணமாக, ஆத்திரமடைந்த பெற்றோர்கள் சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை கேத்தாண்டப்பட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதனை அறிந்து நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். ஆனால், அதனை ஏற்காத பெற்றோர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டுவருகின்றனர்.