Connect with us

இந்தியா

உழவர் பிரச்சினைக்கு தீர்வு காண உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு முதல் மத்திய அரசுக்கு வலியுறுத்தல் வரை – பாமக உழவர் மாநாட்டுத் தீர்மானங்கள்

Published

on

உழவர் பிரச்சினைக்கு தீர்வு காண உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு முதல் மத்திய அரசுக்கு வலியுறுத்தல் வரை - பாமக உழவர் மாநாட்டுத் தீர்மானங்கள்

Loading

உழவர் பிரச்சினைக்கு தீர்வு காண உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு முதல் மத்திய அரசுக்கு வலியுறுத்தல் வரை – பாமக உழவர் மாநாட்டுத் தீர்மானங்கள்

பாமக சார்பில், உழவர் மாநாடு இன்று திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் பின்வருமாறு:

Advertisement

1. தமிழ்நாட்டு உழவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயவும், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து பரிந்துரைக்கவும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்.

உலகிற்கே உணவு படைக்கும் கடவுள்கள் என்று உழவர்கள் போற்றப்பட்டாலும் கூட, உலகின் சபிக்கப்பட்ட இனம் உழவர்கள் தான் என்று கூறும் வகையில் தான் அவர்களின் நிலைமை உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான உழவர்கள் மீள முடியாத அளவுக்கு கடன் சுமையில் சிக்கியுள்ளனர். கடன் சுமையை தாங்க முடியாமல் தமிழ்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உழவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். பயிர்களுக்கு நியாயமான கொள்முதல் விலை வழங்கப்படாதது, இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசும், காப்பீட்டு நிறுவனங்களும் உரிய இழப்பீடு வழங்காதது, வேளாண் இடுபொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறியது போன்றவைதான் உழவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும், அவர்கள் கடன் வலையில் சிக்கிக் கொள்வதற்கும் முக்கிய காரணம்.

இந்தியாவில் முழுக்க முழுக்க உழவுத் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டிருப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 27 ரூபாய் மட்டுமே வருமானம் கிடைப்பதாக உழவர்களின் வாழ்க்கை நிலை குறித்து ஆராய்வதற்காக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு, அண்மையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் உழவர்கள் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை மிக அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டின் நிலவரப்படி தமிழ்நாட்டு உழவர்கள் மொத்தம் ரூ.3.47 லட்சம் கோடி கடனை வங்கிகளுக்கு செலுத்த வேண்டியுள்ளதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உழவர்களின் வருவாயைப் பெருக்கும் வகையில், பயனுள்ள திட்டங்கள் எதுவும் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படவில்லை.

Advertisement

உழவர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு, அவர்களின் விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்கப்படுவதுடன், அனைத்து விளைபொருட்களும் குறித்த காலத்தில் கொள்முதல் செய்யப்பட்டால்தான் உழவுத் தொழிலை இலாபமானதாக மாற்ற முடியும். அப்போதுதான் உழவர்கள் கடன் சுமையின்றி நிம்மதியாக வாழ முடியும். இதை உறுதி செய்யவேண்டிய முதன்மைக் கடமை மாநில அரசுக்கு தான் இருக்கிறது. எனவே, உழவர்களின் அனைத்து பிரச்சினைகள் குறித்து ஆராயவும், அவற்றுக்கான தீர்வுகள் என்னென்ன என்பது குறித்து பரிந்துரைக்கவும் வசதியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதி ஒருவர் தலைமையில் ஆணையம் அமைக்க வேண்டும்; அதன் பரிந்துரைகள் மீது உரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

2. அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் கொள்முதல் விலை உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

அனைத்து வேளாண் விளைபொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுவதற்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும்; வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்; உழவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்; மின்சாரக் கட்டணங்களை உயர்த்தக் கூடாது; 2013ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை அதன் மூல வடிவத்தில் செயல்படுத்த வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் போராடுவதற்காக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த உழவர்கள் தடையை மீறி டெல்லிக்கு செல்ல முயன்று கொண்டிருக்கின்றனர். ஆனால், அவர்கள் டெல்லி மாநகர எல்லைக்குள் நுழைய முடியாமல் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இந்த அடக்குமுறை தவறு.

Advertisement

நாடாளுமன்றத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டில் வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவித்தல் மற்றும் வசதி ஏற்படுத்துதல்) சட்டம், விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் (அதிகாரம் அளிப்பு மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்த சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) சட்டம் ஆகிய 3 சட்டங்கள் இயற்றப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் உழவர்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து 3 சட்டங்களையும் திரும்பப் பெற்ற மத்திய அரசு, உழவர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுவது தொடரும் என்று வாக்குறுதி அளித்தது. அந்த வாக்குறுதிக்கு சட்ட அங்கீகாரம் வேண்டும் என்பது தான் உழவர்களின் கோரிக்கை ஆகும். நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவடைந்து விட்ட நிலையில், அவர்களின் கோரிக்கை குறித்து உழவர் அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும்; அதனடிபடையில் அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் கொள்முதல் விலை உத்தரவாத அவசரச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்; மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

3. பாசனத் திட்டங்களை செயல்படுத்தத் தவறிய திமுக அரசுக்கு கண்டனம்.

தமிழ்நாட்டில் கடந்த 48 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கர் சாகுபடிப்பரப்பு குறைந்திருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்திருக்கும் நிலையில், இழந்த சாகுபடிப் பரப்பை மீட்டெடுக்கும் வகையில், பாசனத் திட்டங்களை செயல்படுத்தவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலையொட்டி, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நீர்ப் பாசனத் திட்டங்கள் தொடர்பாக கீழ்க்கண்ட வாக்குறுதிகளை அளித்திருந்தது.

Advertisement

1. காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
2. தாமிரபரணி – கருமேனி – நம்பியாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
3. ரூ.2000 கோடி செலவில் 200 தடுப்பணைகள் செயல்படுத்தப்படும்.
4. நெல்லை, தூத்துக்குடி,விருதுநகர் மாவட்டங்களில் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயனடையும் வகையில் கன்னிகா மதகுக் கால்வாய் சீரமைக்கப்படும்.
5. முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் ரூ.10,000 கோடியில் ஏரி, குளங்கள் பாதுகாப்புத் திட்டம்
6. ரூ.3,000 கோடியில் கொள்ளிடம் ஆற்றில் கல்லணைக்கு கிழக்கே, விசுவந்தட்டை, விளாங்குடி, வீரமாங்குடி, குடிதாங்கி, வாழ்க்கை ஆகிய இடங்களில் உயர்மட்ட மேம்பாலத்துடன் கூடிய 5 கதவணைகள் கட்டப்படும்.
7. மேட்டூர் உபரிநீர்த் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

என்பன உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. ஆனால், அவற்றில் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட அத்திக்கடவு – அவினாசித் திட்டம், மேட்டூர் உபரிநீர்த்திட்டம் ஆகியவை அரைகுறையாக செயல்படுத்தப்பட்டு திறக்கப்பட்டு இருப்பதால், உழவர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை. நான்கு ஆண்டுகால திமுக அரசின் எந்தப் புதிய பாசனத் திட்டமும் அறிவிக்கப்படவும் இல்லை, செயல்படுத்தப்படவும் இல்லை. உழவர்கள் நலனில் அக்கறையின்றி செயல்படும் திமுக அரசை இந்த மாநாடு கடுமையாகக் கண்டிப்பதுடன், உழவர்களின் நலன் காப்பதற்கான நீர்ப் பாசனத் திட்டங்களை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.

4. வேளாண் நிதிநிலை அறிக்கையை பெயரளவில் இல்லாமல், வேளாண் வளர்ச்சிக்கு உதவும் ஆவணமாக தமிழக அரசு வெளியிட வேண்டும்.

Advertisement

தமிழ்நாட்டில் வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிட வேண்டும் என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. கடந்த 17 ஆண்டுகளாக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கைகளை பா.ம.க. வெளியிட்டு வருகிறது. பா.ம.க. கொடுத்த அழுத்தம் காரணமாக, 2021ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறது. ஆனால், அது ஒரு சடங்காகவே உள்ளது.

வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று வலியுறுத்தப் படுவதன் நோக்கமே அத்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதுதான். ஆனால், வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தாலும் கூட, அதற்கான நிதி ஒதுக்கீடு இன்னும் ரூ.13,000 கோடியை தாண்டவில்லை. அதனால், வேளாண் நிதிநிலை அறிக்கை தனியாக தாக்கல் செய்யப்பட்டாலும் அதனால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

இந்தநிலையை மாற்றி, வேளாண் நிதிநிலை அறிக்கையை பெயரளவில் இல்லாமல், வேளாண் வளர்ச்சிக்கு உதவும் முழுமையான ஆவணமாக தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும். அதில் வேளாண் துறைக்கு மட்டும் ரூ.50,000 கோடியும், நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு குறைந்தது ரூ.20,000 கோடியும் நிதி ஒதுக்க வேண்டும் என்று இந்த மாநாடு கோருகிறது.

Advertisement

5. உழவர்களுக்கு இடுபொருள் மானியமாக, ஏக்கருக்கு ரூ.10000 வழங்கவேண்டும்.

உழவுத் தொழிலை இலாபகரமானதாக மாற்றவேண்டும் என்பதுதான் ராமதாஸின் நோக்கம் ஆகும். இந்த இலக்கை எட்டுவதற்காக உழவுத் தொழிலுக்கான இடுபொருட்கள் அனைத்தையும் இலவசமாக வழங்கவேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார். உழவர்களின் இடுபொருள் செலவில் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்ளும் நோக்குடன், மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.6000-ஐ இடுபொருள் மானியமாக வழங்கி வருகிறது. ஆனால், இது எந்தவகையிலும், போதுமானது அல்ல. தெலங்கானத்தில் ஒரு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வீதம் இடுபொருள் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. தெலுங்கானா மாநிலத்துடன் ஒப்பிடும் போது, தமிழ்நாட்டில் பாசன செலவுகள் அதிகம் என்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் இடுபொருள் மானியமாக ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூ.10,000 வழங்க வேண்டும் என்று மாநில அரசை, உழவர் பேரியக்க மாநாடு கேட்டுக்கொள்கிறது.

6. மத்திய அரசின் உழவர் மூலதன மானியத்தின் அளவை ரூ.12,000 ஆக உயர்த்த வேண்டும்.

Advertisement

உழவர்களின் இடுபொருள் செலவில் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்ளும் நோக்கத்துடன், உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6000 மூலதன மானியம் வழங்கும் திட்டத்தை கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் 6 ஆண்டுகள் ஆகியும் இந்த மானியத் தொகை உயர்த்தப்படாமல் அதே அளவில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் உரம் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களின் விலைகள் கணிசமாக உயர்ந்திருக்கும் நிலையில், அதற்கேற்ற வகையில் மானியத் தொகையும் உயர்த்தப்படுவது தான் நியாயமானதாக இருக்கும்.

அதன்படி, உழவர் மூலதன மானியத்தின் அளவை இப்போதுள்ள ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும்; தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கையை 60 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசை உழவர் பேரியக்கம் வலியுறுத்துகிறது.

7. நீர்நிலைகளை தாரைவார்க்கும் நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும்.

Advertisement

தமிழக சட்டப்பேரவையில் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் நாள் கொண்டுவரப்பட்டு, எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்புத் திட்டங்களுக்கான சட்டம் உழவர்களுக்கு எதிரானது என்பதால், அதை திரும்பப் பெறவேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஓராண்டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டு இருந்த இந்தச் சட்டம், இப்போது நடைமுறைபடுத்தப்பட்டு இருக்கிறது. இந்தச் சட்டத்தின்படி, 100 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் தொழில், வணிகம், உட்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், அத்திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு அப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் தாரைவார்க்கப்பட்டுவிடும். இது பாசன ஆதாரங்களை அழித்துவிடுவது மட்டுமின்றி, கனமழை காலங்களில் பெருவெள்ளம் ஏற்படவும் வகை செய்யும். எனவே, உழவர்களுக்கும், இயற்கைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இத்திட்டத்தை அரசு திரும்பப்பெறவேண்டும்.

8. தமிழ்நாட்டில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளை மீட்க தனி வாரியம் அமைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் சில பத்தாண்டுகளுக்கு முன் 41,127 ஏரிகள் இருந்தன. அவற்றின் மொத்த கொள்ளவு 347 டிஎம்சி ஆகும். தமிழ்நாட்டில் உள்ள மேட்டூர் அணை, வைகை அணை, பவானி அணை, அமராவதி அணை, சாத்தனூர் அணை உள்ளிட்ட அனைத்து அணைகளின் ஒட்டுமொத்த கொள்ளளவைவிட, ஏரிகளின் கொள்ளளவு மிகவும் அதிகம் ஆகும். ஆனால், தமிழ்நாட்டில் இருந்த ஏரிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள் காணாமல் போய்விட்டன. இப்போது பயன்பாட்டில் உள்ள சுமார் 27,000 ஏரிகளும் முறையாக பராமரிக்கப்படாததால், அவற்றின் கொள்ளளவும் பெருமளவில் குறைந்துவிட்டது. தமிழ்நாட்டில் தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து ஏரிகள் மற்றும் குளங்களையும் தூர்வாரி மேம்படுத்தவும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன