இந்தியா
திமுக நிர்வாகியை விரட்டி விரட்டி அடித்த விசிக நிர்வாகி.. வைரலாகும் வீடியோ

திமுக நிர்வாகியை விரட்டி விரட்டி அடித்த விசிக நிர்வாகி.. வைரலாகும் வீடியோ
கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் பல மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் என பலரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பார்கள்.
இந்த நிலையில் கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சி திங்கட்கிழமை நடைபெற உள்ளது. அருமனை வட்டார கிறிஸ்தவ பேரவை இயக்க செயலாளரும், விசிக மாநில செயலாளருமான ஸ்டீபன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனித்து வந்துள்ளார்.
சனிக்கிழமை அன்று அருமனை நெடுங்குளம் சந்திப்பில் நின்றிருந்த ஸ்டீபன், தனது ஆதரவாளர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பேசியதாக கூறப்படுகிறது.
அதை பார்த்த திமுக விவசாய அணி பொறுப்பாளர் பிரபு என்பவர், தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அதை பார்த்ததும் ஸ்டீபன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். தான் பேசுவதையே படம் பிடிக்கும் அளவிற்கு தைரியம் உள்ளதா என கூறி, திமுக நிர்வாகியை ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளார்.
அரை நிர்வாண கோலத்தில் அவரை சாலையில் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த பிரபு, குழித்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட திமுக நிர்வாகி பிரபு, அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
விசிக நிர்வாகி ஸ்டீபன் மீது, முப்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறிய பிரபு, தன்னை தாக்கியதுடன், தனது பைக்கில் வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும் பறித்துக்கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.