Connect with us

இந்தியா

ஐ.டி.விங்- இளைஞரணி-முதியவர் அணி… அமைச்சர்கள் சுவாரஸ்ய மோதல்!

Published

on

Loading

ஐ.டி.விங்- இளைஞரணி-முதியவர் அணி… அமைச்சர்கள் சுவாரஸ்ய மோதல்!

திமுக ஐடி விங் நிர்வாகிகளை பார்த்து, கட்சியின் மாவட்ட செயலாளர்கள் பயப்படுகிறார்கள்” என்று அமைச்சர் எ.வ.வேலு அதிரடியாக பேசியுள்ளார்.

திமுக ஐடி விங்கில், கட்சி நிர்வாக ரீதியாக 11 மண்டலமாக பிரித்து ஆய்வுக் கூட்டங்கள் நடந்து வருகின்றன. திருச்சி, தஞ்சை, காஞ்சிபுரத்தில் நடந்ததையடுத்து இன்று (டிசம்பர் 23) சேலம் மண்டல ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Advertisement

கரும்பாலை அருகில் உள்ள தீர்த்தமலை திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்… திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஐடி விங் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்கு சேலம் மாவட்ட அமைச்சர் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஐ.டி.விங் மாநில செயலாளரான அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலை வகிக்க, ஐடி விங் நிர்வாகி டாக்டர் ஏ.கே.தருண் வரவேற்புரை ஆற்றினார்.

அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், எம்.பி.க்கள் டி.எம்.செல்வகணபதி, தருமபுரி மணி, கள்ளக்குறிச்சி மலையரசன், மாவட்டச் செயலாளர்கள் இரா. பழனியப்பன், தடங்கம் சுப்பிரமணியன், உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், எஸ்.ஆர்.சிவலிங்கம், ஐ.டி.விங் மாநில ஆலோசகர் கோவி.லெனின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், “எதிரிகளின் பொய் பிரச்சாரம் பாயும் போது அதை எதிர்த்து செயல்படுவது திமுக ஐடி விங்தான்.
முகநூல், வாட்ஸ் அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சோஷியல் மீடியாக்களில் வலிமையாக செயல்படுகிறார்கள்.

நீட் தேர்வு பிரச்சினையை கள்ளக்குறிச்சி ஐடிவிங் நிர்வாகிகள் சிறப்பாக கையாண்டனர். சில மாவட்ட செயலாளர்கள் ஐடி விங் நிர்வாகிகளை சுதந்திரமாக செயல்படவிடுவதில்லை . அவர்கள் நமக்கு போட்டியாக வந்துவிடுவார்களோ என்று பயந்து பின்வாங்குகிறார்கள். ஐடி விங் நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை.

அவர்களால் மாவட்டச் செயலாளர்களை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. அதனால் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். ஐடிவிங் அணி என்பது அறிவாலய அணி” என்றார்.

Advertisement

அடுத்தபடியாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசும்போது, “எனக்கு ஏசதான் தெரியும்… பேச தெரியாது . நாங்கள் அறிவாளிகள் இல்லை. ஆனால் எங்களிடம் முதிர்ச்சியும் ,அனுபவமும் இருக்கிறது. இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். எங்களை போன்றவர்கள் தயாராக இருக்கிறார்கள். விவேகமாக அணி இளைஞரணி, அறிவார்ந்த அணி ஐடி விங். ஆனால் எல்லோரையும் வழி நடத்துவது எங்களை போன்ற முதியவர் அணிதான்” என அமைச்சர் வேலுவுக்கு பதில் தருவது போல் பேசி கூட்டத்தைக் கலகலப்பாக்கினார்.

தருமபுரி மாவட்ட செயலாளார் பழனியப்பன் பேசும்போது, “எங்களை போன்றவர்களுக்கு ட்விட்டர், முகநூல் போன்ற சோஷியல் மீடியாக்கள் கையாள தெரியவில்லை. ஆட்களை வைத்துதான் பயன்படுத்துகிறோம். எங்களை போன்ற சீனியர்களுக்கும் பயிற்சி கொடுங்கள். நாங்களும் சுயமாக செயல்படுவோம் ” என கூற, அதை மேடையில் இருந்தே சிலர் ஆதரித்தனர்.

அதன் பின் உரையாற்றிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “அதற்கான முன்னெடுப்புகளை செய்கிறோம். அறிவு, உழைப்பு, அனுபவம் ஆகிய மூன்றையும் பயன்படுத்தி வெற்றி பெறுவோம். ‘என் உயிரினும் மேலான…’ என்ற தலைப்பில் 182 பேச்சாளர்களை வைத்து இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி நிகழ்ச்சி நடத்தினார்.

Advertisement

அதேபோல நம் ஐடி விங் சார்பாக ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 10 பேச்சாளர்களை உருவாக்க வேண்டும். ஐடி விங் சார்பாக 2000 பேச்சாளர்களை தயார்படுத்தி பெரிய நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

ஒன்றியம், நகரம், மாநகரம் வார்டு பகுதிகளில் உள்ள திமுகவின் முன்னோடிகள், வயதானவர்கள், அனுபவமுள்ளவர்கள் இருப்பார்கள் அவர்களிடம் கட்சியின் பங்களிப்பு, சாதனை, அனுபவங்களை வீடியோவாக எடுங்கள். அதை நாம் பயன்படுத்துவோம்.
மார்ச் 1 (முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பிறந்தநாள்) முதல் நிறைய டாஸ்க்குகள் தர இருக்கிறோம். அதையெல்லாம் நீங்கள் சிறப்பாக செயல்படுத்துங்கள்” என்று கூறினார்.

இந்த கூட்டம் காலை 10.05 தொடங்கி மதியம் 1.05 வரை நடைபெற்றது.

Advertisement

கூட்டத்தின் நிறைவில் ஐடி விங் நிர்வாகிகளுக்கு கிஃப்ட் பாக்ஸ் ஒன்று கொடுத்தனர். அதற்குள் கொடை, பிளாஸ்டிக், ஐடி விங் சின்னம் பொறிக்கப்பட்ட டி ஷர்ட், பேனா, நோட்புக்ஸ், பேட்ச், காலண்டர், டைரி ஆகியவை வைக்கப்பட்டிருந்தன.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன