இந்தியா
டங்ஸ்டன் திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு வலிமையாக உள்ளது – சு.வெங்கடேசன் எம்.பி.

டங்ஸ்டன் திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு வலிமையாக உள்ளது – சு.வெங்கடேசன் எம்.பி.
டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 3 நாட்கள் நடைபெற்ற நடைபயணம் மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வழக்கறிஞர் வெற்றி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, டங்ஸ்டன் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்புடைய கிராம மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தினர்.
பின்னர் நியூஸ்18க்கு பேட்டியளித்த சு.வெங்கடேசன், மேலூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், பிரச்னையின் தன்மையை புரிந்து கொள்ள வேண்டுமென தெரிவித்தார். மேலூர் அருகே 5,000 ஏக்கர் பகுதியை ஏலம் விட்டுள்ளதாகவும், புராதன சின்னங்கள் 500 ஏக்கரில் மட்டும்தான் உள்ளதாகவும், டங்ஸ்டன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை எனவும் தொடர்புடைய மத்திய அமைச்சர் தன்னிடம் கேட்டதாகவும் சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
எனவே, மேலூர் அருகே உள்ள கிராம மக்கள் பிரச்சனையின் தன்மையை புரிந்துகொண்டு எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் எனவும், மேலும், அனைத்து அரசியல் கட்சிகளும் டங்ஸ்டனுக்கு எதிராக இணைந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்யுமாறும் சு.வெங்கடேசன் எம்.பி. கேட்டுக் கொண்டுள்ளார்.