இந்தியா
“கொள்கை கூட்டணி மட்டுமல்ல, நிரந்தர கூட்டணி”… நல்லகண்ணு பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின்

“கொள்கை கூட்டணி மட்டுமல்ல, நிரந்தர கூட்டணி”… நல்லகண்ணு பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின்
திமுக கூட்டணி என்பது கொள்கை கூட்டணி மட்டுமல்ல, நிரந்தர கூட்டணி என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 26) தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று தனது 100-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் நல்லகண்ணுவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு முழுவதும் அவரது பிறந்தநாளை கொண்டாட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி பழ.நெடுமாறன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்கும், பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி காலை முதல் மாலை வரை நடைபெறுகிறது.
பொதுவுடைமை இயக்க நூற்றாண்டும், நல்லகண்ணு பிறந்தநாள் நூற்றாண்டு விழாவும் ஒருசேர கொண்டாடப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பான வாய்ப்பை பெற்றிருக்கிற நல்லகண்ணுவை நானும் உங்களோடு சேர்ந்து வாழ்த்துகிறேன்.
நான் அவரை வாழ்த்த வரவில்லை. அவரிடம் வாழ்த்து பெற வந்துள்ளேன். திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படக்கூடிய திட்டங்களுக்கெல்லாம் உறுதுணையாக இருப்பவர் நல்லகண்ணு. அமைதியாக, அடக்கமாக, ஆழமாக எதையும் சிந்தித்து செயல்படக்கூடியவர். அப்படிப்பட்ட நல்லகண்ணுவை வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன். தொடர்ந்து அவர் எங்களுக்கு துணை நின்று வழிகாட்ட வேண்டும்.
200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று நான் சொன்னேன். ஆனால், இன்றைக்கு இருக்கக்கூடிய சூழலில், 200 தொகுதிகளைக் கடந்து நாம் வெற்றி பெறுவோம்.
ஏழு ஆண்டுகளாக இந்த கூட்டணியை தொடர்ந்து நாம் கடைபிடித்து தேர்தல் களத்தில் வெற்றி பெற்று வருகிறோம். இது கொள்கை கூட்டணி மட்டுமல்ல, நிரந்தர கூட்டணி என்பதை இந்த நேரத்தில் அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொள்கிறேன். அதற்கு நீங்கள் எல்லாம் துணை நிற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.