இந்தியா
சுனாமி நினைவு தினம்… உறவினர்கள் அஞ்சலி!

சுனாமி நினைவு தினம்… உறவினர்கள் அஞ்சலி!
தமிழகம் முழுவதும் இன்று (டிசம்பர் 26) கடலோர மாவட்டங்களில் 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கடந்த 2004-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்துக்கு மறுநாள் டிசம்பர் 26-ஆம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளில் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், ஆழிப்பேரலைகள் பல ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு சீறிப் பாய்ந்தது.
இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, ஆப்பிரிக்கா நாடுகளில் கடற்கரை பகுதிகளில் வசித்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆழிப்பேரலையில் சிக்கி உயிர் நீத்தனர். ஆயிரக்கணக்காணோர் காணாமல் போயினர்.
தமிழகத்தில் சுனாமி தாக்குதலால், சென்னை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கடலூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட கடலோர பகுதிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டன. தமிழகத்தில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
சுனாமி பாதிப்பு ஏற்பட்டு இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
உயிரிழந்தவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், மீனவர்கள், அரசியல் கட்சியினர் கடலுக்கு சென்று பால் ஊற்றியும் பூக்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர். சென்னை மெரினா கடற்கரையில், தமிழக ஆளுநர் ரவி பொதுமக்களுடன் இணைந்து பால் ஊற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.
சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு 20 ஆண்டுகள் ஆகியும், அது ஏற்படுத்திய ஆறாத ரணம் இன்னும் வடுவாகவே இருக்கிறது.