இந்தியா
டாப் 10 நியூஸ்: மனதின் குரல் நிகழ்ச்சி முதல் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் வரை!

டாப் 10 நியூஸ்: மனதின் குரல் நிகழ்ச்சி முதல் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் வரை!
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அந்தவகையில் டிசம்பர் மாத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று (டிசம்பர் 29) மனதில் குரல் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகிறார்.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 75, 028 மாணவியர்க்கு மாதம் ரூ.1000 வழங்கிடும் வகையில் புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தூத்துக்குடியில் தொடங்கி வைக்கிறார்.
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை (டிசம்பர் 30) இரவு பி.எஸ்.எல்.வி சி- 60 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுண்ட்டவுன் இன்று இரவு 8.58 மணிக்கு தொடங்குகிறது.
இன்று நடைபெறும் புரோ கபடி லீக் இறுதிப்போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.03-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.61-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தெற்கு கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அஜர்பைஜானில் இருந்து ரஷ்யாவுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம், கஜகஸ்தானில் தரையிறங்க முயற்சித்தபோது, விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 38 பேர் உயிரிழந்தனர்.
இன்றைய ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர், கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைகிறது.
2024-ஆம் ஆண்டின் கடைசி ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கோவை ஆர்.எஸ்.புரத்தில் இன்று நடைபெறுகிறது.