Connect with us

சினிமா

தி ஸ்மைல்மேன்: விமர்சனம்!

Published

on

Loading

தி ஸ்மைல்மேன்: விமர்சனம்!

திரைப்படவுலகில் ‘சீசன்’ என்ற சொல்லின் கீழ் சில படங்கள் வரிசை கட்டும். ரொமான்ஸ், காமெடி, ஆக்‌ஷன், ஹாரர் என்று ஒவ்வொரு வகைமையிலும் கொத்துகொத்தாகப் படங்கள் வெளியாகும்.

‘காஞ்சனா’, ‘அரண்மனை’ வெற்றிகளுக்குப் பிறகு, இப்போது வரை ஹாரர் படங்கள் நம்மைத் துரத்தி வருகின்றன. அந்த வரிசையில், த்ரில்லர் வகைமையில் இன்னொரு படமாக வந்திருக்கிறது ‘தி ஸ்மைல்மேன்’.

Advertisement

இது நடிகர் சரத்குமாரின் 150வது படம் என்ற சிறப்பையும் கொண்டிருக்கிறது. ஷ்யாம் – பிரவீன் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீகுமார், இனியா, சிஜா ரோஸ், ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், ராஜ்குமார் உட்படப் பலர் நடித்துள்ளனர்.

ஒரு ‘சைக்கோ’ கொலைகாரனைத் துரத்திச் செல்லும்போது காவல்துறை அதிகாரி சிதம்பரம் நெடுமாறனின் (சரத்குமார்) கார் விபத்துக்குள்ளாகிறது. அப்போது, அங்கு வரும் அந்த கொலைகாரன் ‘நீ திரும்பவும் வெளிச்சத்திற்கு வந்தால் நானும் என்னோட வேலையை ஆரம்பிப்பேன்’ என்கிறார். அது யார் என்று அறியும் சிதம்பரத்தின் முயற்சி தோல்வியடைகிறது. அவர் மயங்கிச் சரிகிறார்.

மருத்துவச் சிகிச்சைகளுக்குப் பிறகு, பலநாட்கள் ஓய்வில் இருக்கிறார் சிதம்பரம். அவருக்கு ‘அல்சைமர்ஸ்’ பாதிப்பு கடுமையாக இருப்பதாகச் சொல்கிறார் மருத்துவர் (பிரியதர்ஷினி ராஜ்குமார்). அதற்குள் ஐந்தாண்டுகள் கடந்துவிடுகின்றன.

Advertisement

‘இன்னும் ஓராண்டு மட்டுமே உங்களுக்குள் பழைய நினைவுகள் இருக்கும்’ என்று சொல்கிறார் மருத்துவர். அதனால், அதனை மீட்டெடுத்துப் பதிவு செய்யும் வேலைகளைச் செய்யுமாறு சிதம்பரத்தை அறிவுறுத்துகிறார்.

அதையடுத்து, தான் எதிர்கொண்ட குற்ற வழக்குகள் குறித்த தகவல்களை ஒரு நூலாக எழுதி வெளியிடுகிறார் சிதம்பரம். அதில், ‘தி ஸ்மைல்மேன்’ எனும் அத்தியாயம் மட்டும் காலியாக இருக்கிறது.

அந்த கொலைகாரனைத் துரத்தும்போதுதான் சிதம்பரம் விபத்துக்கு உள்ளாகியிருக்கிறார். அது அவருக்கு மட்டுமே தெரியும்.

Advertisement

அதேநேரத்தில், அந்த நபரை மூத்த அதிகாரி வெங்கடேஷ் (சுரேஷ் மேனன்) சுட்டுக்கொன்றதாகக் காவல் துறை சொல்கிறது. சிதம்பரம் விபத்துக்கு உள்ளான அன்று, வெங்கடேஷ் காணாமல் போனதாகவும் சொல்லப்படுகிறது. அதன்பிறகு அவர் என்னவானார் என்று யாருக்கும் தெரியவில்லை.

அதனால், ’வெங்கடேஷ் சுட்டுக்கொன்றது சைக்கோ கொலைகாரன் இல்லையா’ என்ற கேள்வி பத்திரிகையாளர்களால் கேட்கப்படுகிறது.

இந்த நிலையில், ’வழக்குகளில் தண்டனை பெறாத குற்றவாளிகளாக நீங்கள் கருதும் சிலர் பற்றிய தகவல்களை என்னிடம் தாருங்கள்’ என்று ஓய்வுபெற்ற காவலர் ஒருவரிடம் (ஜார்ஜ் மரியான்) கேட்கிறார் சிதம்பரம். அது மட்டுமல்லாமல், ‘அந்த நபர்களைத் தொடர்ந்து கண்காணித்து, யாரேனும் அவர்களைப் பின்தொடர்கிறார்களா என்று அறிய வேண்டும்’ எனவும் சொல்கிறார்.

Advertisement

அதற்கடுத்த நாட்களில், அந்த குற்றவாளிகளிடம் தானாகச் சென்று அறிமுகமாகி நட்பை வளர்க்கிறார் சிதம்பரம். அவர்கள் ஒவ்வொருவரும் ‘தி ஸ்மைல்மேன்’ பாணியில் அடுத்தடுத்துக் கொல்லப்படுகின்றனர்.

வாய் கிழிக்கப்பட்டு பற்கள் வெளியே தெரிய, ‘ஸ்மைல்’ அடையாளத்தைத் தாங்கிய நிலையில் கண்டெடுக்கப்படுகின்றன அந்த சடலங்கள்.

அதன் தொடர்ச்சியாக, அந்த ஓய்வு பெற்ற காவலரையும் கொலை செய்கிறார் அந்த கொலைகாரன். அவர் கொலையாவதற்குச் சில நொடிகளுக்கு முன்பாக, அவரது வீட்டிற்குச் செல்கிறார் சிதம்பரம். ஆனாலும், அவரால் அந்த கொலைகாரனைப் பிடிக்க முடிவதில்லை.

Advertisement

அதன்பின், சிதம்பரம் என்ன செய்தார்? மேற்சொன்ன கொலை வழக்குகளை விசாரணை செய்யும் குழு என்ன செய்தது? அந்த கொலைகாரன் ஏன் சிதம்பரத்தைக் குறி வைத்து துரத்துகிறார் என்ற கேள்விகளைத் தாங்கி நிற்கிறது இத்திரைப்படம்.

பின்பாதியில் அவற்றுக்கு என்ன பதில்கள் கிடைத்தன என்பதை  என்பதுவே இப்படத்தின் யுஎஸ்பி.

இந்தக் கதையில், ஒரு சிறு குழந்தையின் முகம் அடிக்கடி சிதம்பரத்தின் நினைவுகளில் அலையடிக்கும். அதன் பின்னணியும் திரைக்கதையில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Advertisement

’சைக்கோ’ த்ரில்லர் படங்களில் கொலை நிகழ்வதற்காக ஒரு காரணம் சொல்லப்படும். இதிலும் அப்படியொரு காரணம் உண்டு. ஆனால், அது வலுவாகச் சொல்லப்படவில்லை. அதுவே இதன் மைனஸ்.

போலவே, நழுவும் நினைவுகளோடு போராட்டம் நடத்துகிற நாயகன் எனும் அபாரமான ‘ஒன்லைனும்’ சரிவரக் கையாளப்படவில்லை.

இந்த ஆண்டில் மட்டும் ஹிட் லிஸ்ட், மழை பிடிக்காத மனிதன், நிறங்கள் மூன்று படங்களில் இடம்பெற்றிருந்தார் சரத்குமார். கடந்த ஆண்டில் வந்த போர்தொழில், பரம்பொருள் போன்று முதன்மையான பாத்திரத்தைப் பெற்றிருந்தார்.

Advertisement

கிட்டத்தட்ட அப்படியொரு இருப்பை ‘தி ஸ்மைல் மேன்’னில் பெற்று, அதனைச் சிறப்புற வெளிப்படுத்தியிருக்கிறார். என்ன, அவரது ஒட்டுத் தாடிதான் நம் கண்களை உறுத்துகிறது.

இக்கதையில், நாயகனுக்கு அடுத்த இடத்தில் ஏதேனும் ஒரு பாத்திரத்தை இடம்பெறச் செய்திருக்க வேண்டும். அப்படியொரு பாத்திரத்தில் ஸ்ரீகுமார் நடித்திருக்கிறார். ஆனால், அவரது இருப்பு அந்த தேவையைப் பூர்த்தி செய்யவில்லை.

இந்தக் கதையில் கலையரசனுக்கும் ஒரு இடம் உண்டு. அது என்ன என்பதை விக்கிபீடியாவில் யாரோ ‘புட்டு’ வைத்திருக்கிறார்கள். ஆனால், இயக்குனர் இணை அதனைத் திரையில் ‘சஸ்பென்ஸ்’ ஆக நமக்குச் சொல்கிறது.

Advertisement

இதில் சிஜா ரோஸ், இனியா, ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், குமார் நடராஜன், பேபி ஆலியா, பிரியதர்ஷினி ராஜ்குமார் ஆகியோர் நல்லதொரு நடிப்பைத் தந்திருக்கின்றனர்.

சரத்குமார் குழுவில் இடம்பெறுபவராக வரும் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ராஜ்குமார் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். ஆனால், அவருக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை.

விக்ரம் மோகனின் ஒளிப்பதிவு ‘ஹேண்டி’யாக இருக்குமளவுக்கு, திரையில் பரபரப்பை ஊட்ட முயற்சிக்கவில்லை.

Advertisement

சான் லோகேஷின் படத்தொகுப்பு காட்சிகளை வரிசை கட்டி அடுக்கியிருக்கிறது. ரவி பாண்டியனின் கலை வடிவமைப்பும் சரி, பிணங்களைக் காட்டும் ஷாட்களில் வினோத் சுகுமாரனின் ஒப்பனையும் சரி, நம்மை அதிர்ச்சியூட்டி ஈர்க்கும்படியாக இல்லை.

மேற்சொன்ன குறைகளை மட்டுப்படுத்தும் வகையில், கவாஸ்கர் அவினாஷின் பின்னணி இசை அமைந்திருக்கிறது. ‘ஒரு த்ரில்லர் படம் பார்க்கிறோம்’ என்ற உணர்வை அதுவே அதிகப்படுத்தியிருக்கிறது.

இப்படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கின்றனர் ஷ்யாம் மற்றும் பிரவீன். இதன் திரைக்கதை வசனத்தை கமலா அல்கெமிஸ் ஆக்கியிருக்கிறார்.

Advertisement

அவர்களிடையேயான ஒருங்கிணைப்பு சரிவர அமையவில்லையோ என்றெண்ண வைக்கிறது இப்படத்தின் காட்சியாக்கம்.

இதற்கு மேல் இடம்பெறும் தகவல்கள் ‘ஸ்பாய்லர்’ ரகத்தில் சேரும்.

இந்தக் கதையில் சரத்குமார் பாத்திரத்திற்கு அந்த கொலைகாரனைத் தெரியும் என்பதுவே மையப்புள்ளி. அதற்கேற்ப, ‘இவர்தான் கொலைகாரன்’ என்றறியும் முன்னர் அவரைச் சில முறை சந்திப்பதாகவும் காட்டப்படுகிறது. அந்த இடங்களில், ‘யாரோ இவர்’ என்பது போல அப்பாத்திரம் கடந்து செல்வதை ஏற்க முடியவில்லை.

Advertisement

அதேபோன்று, அல்சைமர்ஸ் தாக்கத்தோடு போராடும் ஒரு நாயகனைக் காட்டிய வகையில் இன்னும் சிறப்பாகச் சில காட்சிகளைச் சேர்த்திருக்க முடியும். அதையும் படக்குழு ‘மிஸ்’ செய்திருக்கிறது.

கொல்லப்பட்ட சடலங்களைப் புன்னகைப்பதாகக் காட்ட ஏன் கொலைகாரன் முயற்சி செய்கிறார் என்பதுவே இக்கதையில் முக்கியமானது. ’வேட்டையாடு விளையாடு’ படத்தில் வில்லன்களைக் காட்டியது போன்று, இதிலும் அதனைக் கொஞ்சம் விலாவாரியாகக் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அது நிகழ்ந்திருந்தால், சமீப ஆண்டுகளில் மலையாளத்தில் வெளியான ‘அஞ்சாம் பதிரா’, தமிழில் வந்த ‘போர்தொழில்’ படங்களுக்கு இணையான இடத்தைப் பெற்றிருக்கும் இப்படம்.

Advertisement

‘போர்தொழில்’ போன்ற காட்சியமைப்பையும் ஆக்கத்தையும் மட்டுமல்லாமல், அப்படம் முழுவதுமாக இடம்பெற்றிருந்த ஒருமாதிரியான வண்ணக்கலவையையும் அது ஏற்படுத்திய தாக்க்கத்தையும் தவறவிட்டிருக்கிறது ‘தி ஸ்மைல்மேன்’.

ஏனென்றால், ‘த்ரில்லர்’ படங்களின் பிரேம்களில் நிறைந்திருக்கும் இருண்மையும் குறிப்பிட்ட வண்ணமுமே பார்வையாளர்களைச் சரியான ‘மூடில்’ இருக்க வைக்க உதவும். அந்த வகையில், இதில் டிஐ பணியிலும் போதிய கவனம் செலுத்தப்படவில்லை.

இவை அனைத்தையும் தாண்டி, த்ரில்லர் படங்களைப் பார்ப்பதில் இருக்கும் உத்வேகத்தையும், கொலைகாரனை கிளைமேக்ஸில் காட்டிய வகையில் சிறிது ஆச்சர்யத்தையும் வழங்குகிறது ’தி ஸ்மைல்மேன்’. அது குறித்து எதிர்விமர்சனங்களும் எழலாம்.

Advertisement

அவற்றை மீறி, ரசிகர்களை ஈர்க்க அவை மட்டுமே காரணமாக இருக்கின்றன. ’இது போதுமே’ என்பவர்களை ஈர்க்கும் இந்த  ‘தி ஸ்மைல்மேன்’.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன