இந்தியா
நல்லகண்ணு வாழ்த்தை விட பெரிய ஊக்கம் இல்லை… ஸ்டாலின் நெகிழ்ச்சி!

நல்லகண்ணு வாழ்த்தை விட பெரிய ஊக்கம் இல்லை… ஸ்டாலின் நெகிழ்ச்சி!
நல்லகண்ணு வாழ்த்தை விட பெரிய ஊக்கம் ஒன்றும் நமக்கு கிடைத்துவிடப் போவதில்லை என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 29) தெரிவித்தார்.
உலக தமிழர் பேரமைப்பின் நிறுவனர் பழ.நெடுமாறன் தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நூற்றாண்டு விழா கொண்டாட்ட நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “நல்லகண்ணுவை வாழ்த்துவதற்காக நாங்கள் வரவில்லை. அவரிடம் வாழ்த்து பெறுவதற்காக வந்திருக்கிறோம். அவருடைய வாழ்த்தை விட நமக்கு பெரிய ஊக்கம் ஒன்றும் கிடைத்துவிடப் போவதில்லை.
பெரியாருக்கும் கலைஞருக்கும் கிடைக்காத வாய்ப்பு நல்லகண்ணுவிற்கு கிடைத்துள்ளது. பொதுவுடைமை, திராவிடம், தமிழ்தேசிய இயக்கங்களின் சங்கமமாக இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.
நல்லகண்ணுவின் 80-ஆவது பிறந்தநாள் விழாவை மறைந்த தா.பாண்டியன் தான் முன்னின்று நடத்தினார். அந்த விழாவில் கலைஞர் பங்கெடுத்துக்கொண்டு அவரை வாழ்த்தினார்.
கலைஞரை விட நல்லகண்ணு ஒரு வயது தான் இளையவர். இதை குறிப்பிட்டு பேசிய கலைஞர், ‘வயதால் எனக்கு தம்பி. அனுபவத்தால் எனக்கு அண்ணன். நல்லக்கண்ணு வாழும் காலத்தில் நாம் வாழுகிறோம்’ என்று பேசினார். அந்தளவுக்கு நல்லகண்ணுவை தோழமை உணர்வோடு கலைஞர் பாராட்டினார்.
2001-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது கலைஞர் அராஜகமாக கைது செய்யப்பட்டார். அப்போது அதிமுக கூட்டணியில் இருந்த நல்லகண்ணு கலைஞர் கைதை கண்டித்து முதல் முதலாக அறிக்கை வெளியிட்டார். கலைஞர் எழுதிய தாய் காவியத்திற்கு நல்லகண்ணு தான் அணிந்துரை எழுதினார். கலைஞர் தனது இறுதி வரை நல்லகண்ணுவுடன் தோழமையை பேணிக்காத்தார்.
அந்த நட்புணர்வோடு தான் நான் இன்று அவரை பாராட்ட வந்திருக்கிறேன். இயக்கத்திற்காகவே வாழ்ந்துகொண்டிருக்கிற நல்லகண்ணுவை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். கட்சிக்காகவே உழைத்தார். உழைப்பால் வந்த பணத்தை கட்சிக்காகவே கொடுத்தார். அதனால் தான் வரலாற்றில் இன்றைக்கு உயர்ந்து நிற்கிறார்.
1925-ஆம் ஆண்டு டிசம்பர் 20-ஆம் நாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது. அதே ஆண்டு அதே மாதத்தில் டிசம்பர் 26-ஆம் தேதி நல்லகண்ணு பிறக்கிறார். அந்தவகையில், ஓர் இயக்கமும் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறது. அந்த இயக்கத்தின் தலைவரும் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறார். நூற்றாண்டு கொண்டாடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.
திராவிட இயக்கத்திற்கும் பொதுவுடைமை இயக்கத்திற்கும் அரசியல் பிணைப்பு இடை இடையே விட்டுப்போயிருக்கலாம். ஆனால், கொள்கை நட்பு என்றும் தொடரும். அது தேர்தல் அரசியலை தாண்டிய நட்பு” என்று தெரிவித்தார்.