
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 31/12/2024 | Edited on 31/12/2024

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி வெளியான படம் ‘புஷ்பா 2 – தி ரூல்’. இப்படத்தின் சிறப்பு காட்சி, படம் வெளியாவதற்கு முந்தைய நாளான 4ஆம் தேதி ஹைதராபாத்திலுள்ள சந்தியா திரையரங்கில் இரவு திரையிடப்பட்டது. அப்போது, அங்கு அல்லு அர்ஜூன் திடீரென சென்றதால், அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடுத்து கொண்டு சென்றனர். அந்த கூட்ட நெரிசலில் ரேவதி (39) என்ற பெண் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் படுகாயமடைந்து மயக்கமான நிலையில் கீழே விழ, பின்பு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 14 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அந்த சிறுவன் கடந்த 18ஆம் தேதி மூளைச்சாவடைந்தார். இப்போது கோமாவில் இருக்கிறார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் எதிரொலியாக சிறப்பு காட்சிகளுக்கு அம்மாநில அரசு தடை விதித்தது.
முன்னதாக அந்த பெண் இறந்ததை தொடர்ந்து அல்லு அர்ஜூன் மீது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திரையரங்கிற்கு சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு கடந்த 13ஆம் தேதி கைதானார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்ட நிலையில் கைதான அன்றே அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீன் கொடுக்கப்பட்டது. பின்பு ஜாமீனில் வெளியே வந்தார். அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக தெலுங்கானா சட்டமன்றத்தில் அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசுகையில், நெரிசலில் சிக்கி பலியான பெண்ணைக் குறித்தோ, சிகிச்சையில் இருக்கும் அவரது மகனைக் குறித்தோ அல்லு அர்ஜூனை ஆதரிப்பவர்கள் கவலைப்பட்டார்களா? என கடுமையாக அல்லு அர்ஜூனை விமர்சித்தார். இதை மறுத்து செய்தியாளர்களை சந்தித்த அல்லு அர்ஜூன், அனுமதியின்றி திரையரங்குக்கு சென்றேன் என்பது தவறான தகவல் என்று விளக்கமளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக தெலங்கானா நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து சமீபத்தில் பேசியிருந்தனர்.
இந்த நிலையில் நடிகரும் ஆந்திரா துணை முதல்வருமான பவன் கல்யாண் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், “சட்டம் அனைவருக்கும் சமமானதுதான். இந்த சம்பவத்தில் நான் காவல் துறையினரை குறை சொல்ல மாட்டேன். ஏனென்றால் அவர்கள் எப்போதும் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். ரேவந்த் ரெட்டி சிறந்த தலைவர். நானாக இருந்தால் கூட அவர் இதையே தான் செய்திருப்பார். இது எளிதில் தீர்க்கப்படவேண்டிய விஷயம். சினிமா ஹீரோக்கள் மீது மக்கள் அன்பும் ஆதரவும் காட்டுகிறார்கள். ஒரு ஹீரோ வருகிறார் என்றால் ரசிகர்கள் இயல்பாகவே குஷியாகிவிடுவார்கள். இந்த துயரில் அல்லு அர்ஜுனை தொடர்புப்படுத்தி, அவர் மீது மட்டும் குற்றச்சாட்டு வைப்பது நியாயமானது அல்ல. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஆதரவாகவும், பக்க பலமாகவும் அனைவரும் நிற்க வேண்டும்” என்றார்.