Connect with us

சினிமா

பொன்வண்ணன் திரை வாழ்வில் பருத்திவீரன் தந்த வெளிச்சம்!

Published

on

Loading

பொன்வண்ணன் திரை வாழ்வில் பருத்திவீரன் தந்த வெளிச்சம்!

பொன்வண்ணன். தமிழ் திரையுகம் தந்த குணச்சித்திர நடிகர்களில் வெகுசிலரே ‘இவரை எப்படிப்பட்ட குணாதிசயங்களோடும் காட்டலாம்’ என்ற சுதந்திரத்தை இயக்குனர்களுக்குத் தரும். அப்படியொரு கலைஞன் தான் பொன்வண்ணன்.

முகம், உடல்வாகு, உடல்மொழி, தோற்றம், குரல், இவையனைத்தின் வழியே தான் ஏற்ற பாத்திரத்தை வெளிப்படுத்தும் அவரது நடிப்பு பாணி. ஒவ்வொரு படத்திலும் அவற்றில் வேறுபாட்டை வெளிப்படுத்துவார் பொன்வண்ணன். அதனாலேயே, அவரை நம்மால் பாத்திரங்களாக பார்க்க முடிகிறது.

Advertisement

பொன்வண்ணனின் தனிப்பட்ட பாணி இது என்று அவரை ஒரு கட்டத்திற்குள் அடக்க முடியவில்லை. அதுவே அவரது பலமும் பலவீனமாகவும் இருக்கிறது. முதலில் அவர் தலை காட்டிய ‘புது நெல்லு புது நாத்து’ முதல் இப்போது வெளியாகியிருக்கிற ‘மிஸ் யூ’ வரை அதுவே தொடர்கதையாக இருந்து வருகிறது.

ஈரோடு வட்டாரத்தைச் சேர்ந்தவர் பொன்வண்ணன். படிப்பு முடிந்ததும் சினிமா பக்கம் திரும்பியது இவரது ஆர்வம். அதன் காரணமாக, மதர்லேண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பு பணியில் சேர்ந்திருக்கிறார். அங்கு கிடைத்த பயிற்சிகள், அவரை இயக்குனர் நாற்காலி நோக்கி உந்தி தள்ளியது.

அதன் தொடர்ச்சியாக, எண்பதுகளின் இறுதியில் இயக்குனர் பாரதிராஜாவின் பட்டறையில் இணைந்தார் பொன்வண்ணன். அவரது படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியதோடு வசனம் எழுதினார். அதோடு திரையிலும் தலைகாட்டினார்.
அப்போதே, பொன்வண்ணனிடம் நடிப்பார்வம் இருந்தது. ஆனால், அதற்கு வாகான பாத்திரங்கள் அமையவில்லை.

Advertisement

அதனால், நடிப்பின் திசையைத் தீர்மானித்து நாமே நமக்கான பாத்திரங்களை உருவாக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

அன்னை வயல் படத்தை எழுதி இயக்கியதோடு அதில் நடிக்கவும் செய்தார் பொன்வண்ணன். அது எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

தொடர்ந்து கவர்மெண்ட் மாப்பிள்ளை, கடல்புறா, கருத்தம்மா, பசும்பொன் போன்ற படங்களில் நடித்தார். அவற்றில் பல வில்லன் பாத்திரங்களாக அமைந்தன.
சேனாதிபதி, ரெட்டை ஜடை வயசு, எட்டுப்பட்டி ராசா, பெரியதம்பி என்று அந்த பட்டியல் நீளத் தொடங்கியது.

Advertisement

அந்த காலகட்டத்தில், தன் இயக்குனர் கனவை அடைகாத்து காத்திருந்து ‘ஜமீலா’ என்ற படத்தை இயக்கினார். சுவலட்சுமி நடித்த அந்தப் படம், உலக சினிமாவுக்கான கதவுகளை திறந்தது. சில விருதுகளையும் பெற்றது. ஆனால், உள்ளூர் தியேட்டரில் தனக்கு கைத்தட்டல்கள் கிடைப்பதையே விரும்பினார் பொன்வண்ணன். அதற்காக ‘நதிக்கரையினிலே’ என்ற பெயரில் அப்படத்தை வெளியிட்டார். ஆனாலும், அவர் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.

அதனால், கோமதிநாயகம் என்ற பெயரில் ஒரு நகைச்சுவை படம் தந்தார். இடைப்பட்ட காலத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த அனுபவம் அதனைச் செய்யத் தூண்டியது. அந்த முயற்சியும் வெற்றி அடையவில்லை.

மனம் தளராத விக்கிரமாதித்தனாக, புதிதாக வந்த இயக்குனர்களோடு இணைந்து பணியாற்றத் தயாராக இருந்தார். அப்படித்தான், அமீரின் ’பருத்திவீரன்’ படத்தில் கழுவத்தேவன் பாத்திரமாகத் தோன்றினார் பொன்வண்ணன். அந்த நடிப்பு வாய்ப்பு, அவருக்கு சினிமாவில் புதிய கதவுகளை திறந்து வைத்தது. அவர் விரும்பிய கைத்தட்டல்களை, ஆரவாரத்தை அள்ளி வழங்கியது.

Advertisement

அதன்பிறகு வந்த அஞ்சாதே, அயன், மாயாண்டி குடும்பத்தார், பேராண்மை, சிங்கம்புலி, வாகை சூட வா, தலைவா, சதுரங்க வேட்டை என்று எல்லாம் பொன்னான வாய்ப்புகளாகவே அமைந்தன.

ஒருகட்டத்திற்கு பிறகு, ‘ஒரேமாதிரியான பாத்திரங்கள் வேண்டாமே’ என்று யோசிக்க ஆரம்பித்தார் பொன்வண்ணன். நடிப்பாற்றின் வெவ்வேறு கரைகளை தேடித் தேடி ஓடிய பொன்வண்ணன், இப்பொது இளைப்பாறலை நோக்கி நகர்ந்திருக்கிறார்.
அதனால், இரை தேடிக் காத்திருக்கும் சிங்கம் போன்று அவரை நாம் திரையில் பார்ப்பதும் அரிதாகிவிட்டது.

வில்லன் தொடங்கி நாயகன், நாயகியின் தந்தை பாத்திரங்கள் வரை பலவாறாக நாம் பொன்வண்ணனை பார்த்திருக்கிறோம். ஆனால், அவரை முழுநீள நகைச்சுவை பாத்திரத்தில் இதுவரை பார்க்கவில்லை. முழுக்க கமர்ஷியல் படத்தில் கலகலப்பை விதைக்கிற, கலகத்தை ஏற்படுத்துகிற வேடங்களில் பார்க்கவில்லை. இனிவரும் காலங்களில் அதற்கேற்ற வாய்ப்புகளை அவர் பெற வேண்டும். அதற்கேற்ற கதைகளை இயக்குனர்களும் அவருக்குத் தர வேண்டும்.

Advertisement

சினிமா இலக்கணங்களை மீறிய முகம் பொன்வண்ணனுடையது. அது தெரிந்த இயக்குனர்கள், அவரை சிகரத்தில் மீது ஏற்றி அழகு பார்த்திருக்கின்றனர். அந்த எண்ணிக்கை அதிகமானால், பல ரசிகர்கள் அவரது வேறுபட்ட பரிமாணங்களை திரையில் காண முடியும்..!

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன