
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 02/01/2025 | Edited on 02/01/2025

‘கோமாளி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக ‘லவ் டுடே’ படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். இப்படம் பெரும் வரவேற்பு பெற்றதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ட்ராகன் என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க கேஎஸ் ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. ‘ரைஸ் ஆஃப் டிராகன்…’ என்ற பெயரில் வெளியாகியுள்ள இப்பாடல் பிரதீப் ரங்கநாதன் கதாபாத்திரத்தை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இப்பாடலை அனிருத், நதிஷா தாமஸ் பாடியுள்ளனர். விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இப்பாடலில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் கௌதம் மேனன் நடனமாடும் காட்சி இடம்பெறுகிறது. இப்பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.