நக்கீரன் செய்திப்பிரிவு
Photographer
Published on 03/01/2025 | Edited on 03/01/2025
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியான படம் ‘புஷ்பா 2 – தி ரூல்’. இப்படத்தின் சிறப்பு காட்சி, படம் வெளியாவதற்கு முந்தைய நாளான 4ஆம் தேதி ஹைதராபாத்திலுள்ள சந்தியா திரையரங்கில் இரவு திரையிடப்பட்டது. அப்போது, அங்கு அல்லு அர்ஜூன் திடீரென சென்றதால், அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடுத்து கொண்டு சென்றனர். அந்த கூட்ட நெரிசலில் ரேவதி (39) என்ற பெண் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் படுகாயமடைந்து மயக்கமான நிலையில் கீழே விழ, பின்பு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 14 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அந்த சிறுவன் கடந்த மாதம் 18ஆம் தேதி மூளைச்சாவடைந்தார். இப்போது கோமாவில் இருக்கிறார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் எதிரொலியாக சிறப்பு காட்சிகளுக்கு அம்மாநில அரசு தடை விதித்தது.
முன்னதாக அந்த பெண் இறந்ததை தொடர்ந்து அல்லு அர்ஜூன் மீது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திரையரங்கிற்கு சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு கடந்த மாதம் 13ஆம் தேதி கைதானார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்ட நிலையில் கைதான அன்றே அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீன் கொடுக்கப்பட்டது. பின்பு ஜாமீனில் வெளியே வந்தார். அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அல்லு அர்ஜூனுக்கு பெண் பலியான வழக்கு தொடர்பாக ஜாமீன் வழங்கி நம்பள்ளி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கிய நிலையில் தற்போது வழக்கமான ஜாமீனும் அல்லு அர்ஜூனுக்கு கிடைத்துள்ளது.