இந்தியா
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்: விருந்துக்கு செல்கிறீர்களா… அதற்கு முன் இதையெல்லாம் செய்யாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்: விருந்துக்கு செல்கிறீர்களா… அதற்கு முன் இதையெல்லாம் செய்யாதீங்க!
விருந்தும் விருந்தோம்பலும் தமிழர் மரபில் கலந்தவை. பண்டிகை, திருவிழா, திருமண விழாக்களில் மட்டுமே விருந்து என்ற நிலை இன்று மாறிவிட்டது. பஃபே எனச் சொல்லப்படும் மாடர்ன் விருந்து பிரபலமாகிவிட்டது. காலை, மதியம், இரவு என எந்த நேரமும் பஃபே எளிதில் கிடைக்கிறது.
முன்பு எல்லாம் பலரும் விருந்துக்குச் செல்வதற்கு முந்தைய நாளில் இருந்தே அதற்குத் தயாராகிக்கொண்டு இருப்பார்கள். விருந்தை ஒருகை பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். சிலர், மதிய விருந்துக்குச் செல்வதாக இருந்தால், காலை உணவைத் தவிர்த்துவிடுவார்கள், இது தவறு.
என்னதான் அமர்க்களமான விருந்தாக இருந்தாலும் அளவோடு சாப்பிட வேண்டும் என்ற மன உறுதியைக் கடைப்பிடிக்க வேண்டும். காலை உணவையும் இரவு உணவையும் எந்தக் காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது. மதிய விருந்துக்குச் செல்வதாக இருந்தால், நான்கு மணி நேரத்துக்கு முன்னர், எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை அளவாகச் சாப்பிடுவது நல்லது.
இரவு விருந்துக்கு ஆரோக்கியமான இளம் வயதினர் மதிய உணவைத் தவிர்த்து, ஏதோ ஒரு ஜூஸ், பழம் ஆகியவற்றைச் சாப்பிட்டுவிட்டு விருந்துக்குச் செல்வதில் தவறு இல்லை. உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னை உள்ளவர்கள், எந்த வேளை உணவையும் தவிர்க்கக்கூடாது.
தண்ணீர் அருந்தினால் அதிகமாகச் சாப்பிட முடியாதோ என பலர் தண்ணீர் அருந்துவது இல்லை, இது தவறு. எப்போது எல்லாம் தாகம் எடுக்கிறதோ அப்போது எல்லாம் அளவாக, சீரான இடைவெளியில் தண்ணீர் பருகிக்கொண்டே இருப்பது அவசியம். தண்ணீருக்குப் பதில் கோலா பானங்கள், சோடா அருந்துவதைத் தவிர்க்கலாம்.
பொதுவாக, இந்த வகை விருந்துகளில் பலதரப்பட்ட உணவுகள் இருக்கும் என்பதால், எதில் இருந்து தொடங்குவது என்பதில் இருந்து, எதைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட வேண்டும் என்பது வரை கவனத்துடன் இருந்தால், ஆரோக்கியத்துக்கு எந்தக் குறைவும் வராது.