இந்தியா
நூதன போரட்டம் : ஏபிவிபி நிர்வாகிகளை மருத்துவமனையில் பணிபுரிய உத்தரவிட்ட நீதிபதி

நூதன போரட்டம் : ஏபிவிபி நிர்வாகிகளை மருத்துவமனையில் பணிபுரிய உத்தரவிட்ட நீதிபதி
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பு நூதன ஆர்ப்பாட்டம் நடத்திய இரு ஏபிவிபி நிர்வாகிகளுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது
சென்னை அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
எனினும் இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
அந்த வகையில் தமிழக அரசை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க கூறி ஏபிவிபி அமைப்பின் செயலாளர் யுவராஜ் மற்றும் ஸ்ரீதரன் ஆகியோர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பு கடந்த 26ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே அவர்கள் தரப்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கைதான ஏபிவிபி நிர்வாகிகள் இருவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
அவர்கள் இருவரும் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி வரை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு தினமும் சென்று அங்கு அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் நபர்களோடு இணைந்து பணிபுரிய வேண்டும் என்றும் அது தொடர்பான அறிக்கையுடன் பிப்ரவரி 5ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு இருவருக்கும் நீதிபதி நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
மேலும் இருவரும் தலா 10,000 ஜாமீன் பத்திரம் வழங்கவும், மருத்துவமனையில் பணிபுரியும் காலத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபங்களை எழுதித் தரவும் நீதிபதி உத்தரவிட்டார்.