இந்தியா
ஆளுநர் வெளிநடப்பு… ஸ்டாலின் டூ விஜய்… ரியாக்ஷன் என்ன?

ஆளுநர் வெளிநடப்பு… ஸ்டாலின் டூ விஜய்… ரியாக்ஷன் என்ன?
இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 6) தொடங்கியது. ஆளுநர் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய நிலையில், சபாநாயகர் அப்பாவு அச்சிடப்பட்ட ஆளுநர் உரையை தமிழில் வாசித்தார்.
தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட ஆளுநர் உரையை அவை பதிவில் ஏற்றும் படி வேண்டுகோள் வைத்து அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஆளுநர் ரவி சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு. அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர் ரவி.
கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது.
தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?” என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா.
இந்தியாவில் பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆட்சி செய்கிற மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக அமைந்து வருகின்றன.
தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டது முதற்கொண்டு, தமிழ்நாட்டின் மக்களுக்கு எதிராகவும், அரசமைப்புச் சட்டம் ஆளுநருக்கு வழங்கிய அதிகாரங்களை மீறுகிற வகையிலும் தொடர்ந்து செயல்படுவதை ஆளுநர் ஆர்.என். ரவி வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
இதன்மூலம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் செயல்பாடுகளை முடக்குகிற வகையில் அவர் செயல்பட்டு வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது.
அத்தகைய நடவடிக்கைகளை உறுதிபடுத்துகிற வகையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் உரை நிகழ்த்தாமல் புறக்கணித்து விட்டு வெளியேறியிருக்கிறார்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நடவடிக்கை அமைந்திருப்பது தமிழக சட்டப்பேரவையை அவமதிக்கிற செயலாக மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்தையும் அவர் அவமதித்திருக்கிறார் என்றே கருதப்படும். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்ற வேண்டிய ஆளுநர் தேசிய கீதத்தை பாடவில்லை என்று கூறி வெளியேறி இருப்பது ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று என்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தை அவமதித்துள்ள ஆளுநர் ஆர் .என். ரவி செயல் கடும் கண்டனத்துக்குரியது.
திமுக அரசு, தங்களின் தவறான ஆட்சியினால் மக்களுக்கு ஏற்பட்ட கோபத்தை திசை திருப்ப ஆளுநர் மீது பழி சுமத்துவது வாடிக்கையாகிவிட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பிறகு தேசிய கீதம் பாட வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக்கொண்டார். ஆனால் ஆளுநரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்படுவது தான் மரபு. ஆளுநர் தமிழ்நாடு சட்டமன்ற மரபை அவமதித்திருப்பது கண்டனத்துக்குரியது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
அரசியலமைப்பு அதிகாரம் வழங்கியுள்ள சட்டபூர்வ கடமைப் பொறுப்புகளை நிறைவேற்ற தவறியுள்ள ஆளுநர், தமிழ்நாட்டில் நிலவி வரும் அமைதி நிலையை சீர்குலைத்து, அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
தமிழ்நாடு அரசின் பொது நிகழ்வுகளின் ஆரம்பத்தில் தமிழ் தாய் வாழ்த்தும், நிகழ்வின் நிறைவில் தேசிய கீதம் பாடுவது பல பத்தாண்டுகளாக மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை நன்கறிந்த ஆளுநர், தமிழ்நாடு அரசு தேசிய கீதத்தையும், அரசியலமைப்பு சட்டத்தையும் அவமதித்து வருவதாக ஆளுநர் கூறுவது அப்பட்டமான அவதூறு பரப்பும் நோக்கம் கொண்டதாகும்.
நாட்டின் உச்ச நீதிமன்றம் ஆளுநரின் கடமைப் பொறுப்புகளை சுட்டிக்காட்டி, அறிவுறுத்திய உத்தரவுகளையும் அலட்சியப்படுத்தி வருகிறார். சட்டப் பேரவையில் ஆளுநர் உரை நிகழ்வுகள் முடிவடையும் வரை இருந்து, தேசிய கீதத்தை மதிக்க தவறிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் மரபுகளையும், அமைதி நிலையினையும் சீர்குலைக்கும் தீய உள்ள நோக்கம் கொண்ட தொடர் நடவடிக்கைகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்வதையே வாடிக்கையாகவும் தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையிலும் நடந்து கொண்டுள்ள ஆளுநர் ஆர்.என். ரவி, ஆளுநர் பதவியிலிருந்து வெளியேற வேண்டும்.
அத்தகைய முடிவை ஆளுநர் எடுக்காவிட்டால் மத்திய அரசு அரசியல் சாசன சட்டத்தை அவமதிக்கும் அவரை உடனடியாக திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டுமென்று சிபிஐ (எம்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
தமிழக சட்டமன்ற நெடிய வரலாற்றில் , சட்டசபை நிகழ்வின் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்தும் கூட்டத்தின் முடிவில் நாட்டுபண் பாடப்பட்டு நிறைவு செய்யப்பட்டு வருகின்றது.
இந்த மரபுகளை நன்கு தெரிந்த ஆளுநர் ஆர்.என் ரவி தனது மனம்போன போக்கில் மரபுகளுக்கு எதிராக இன்று மீண்டும் உரையை வாசிக்காமல் மூன்றாவது தடவையாக வெளிநடப்பு செய்து தமிழ்நாடு சட்டமன்றத்தையும் தமிழக மக்களையும் அவமதித்துள்ளார்.
இதுப்போன்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேவையான நிதித்தேவைகளை பெற்று தருவதற்கு முயற்சி எடுக்காத ஆளுநர் ஆர்.என் ரவி , பிரச்சனைகளை திசைத்திருப்ப மீண்டும் மீண்டும் நாட்டு பண் விவகாரத்தை முன்னெடுப்பது சட்டமன்ற மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளை களங்கபடுத்தும் செயலாகும்.
தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் மன்றத்தின் மாண்பை சீர்குலைக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை குடியரசு தலைவர் தலையிட்டு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
ஆளுநரின் செயல்பாடுகள் குறித்த நீதிமன்ற தீர்ப்புகளுக்கு விரோதமாக செயல்படும் ஆளுநரின் செயல்களுக்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்
தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு.
பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.
ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்களே இடம் பெற வேண்டும்.
ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும்.
எனவே சட்டமன்ற நிகழ்ச்சிகள் முழுவதையுமே எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.