இந்தியா
ஜோடிக்கப்பட்ட வழக்குகள்… மதுவிலக்கு போலீசார் என்ன செய்கிறீர்கள்? நீதிமன்றம் சரமாரி கேள்வி!

ஜோடிக்கப்பட்ட வழக்குகள்… மதுவிலக்கு போலீசார் என்ன செய்கிறீர்கள்? நீதிமன்றம் சரமாரி கேள்வி!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரண வழக்கில் 8 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் 19ஆம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 68 பேர் உயிரிழந்தனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதற்கிடையே இவ்வழக்கில் மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இவர்கள் அனைவரும் தங்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு இன்று (ஜனவரி 6) நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம். ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, காலம் தாமதமாக குண்டர் சட்டம் போடப்பட்டது என்றும், உரிய ஆவணங்கள் வழங்கப்படவில்லை என்றும் மனுதாரர்கள் சார்பில் வாதிடப்பட்டது.
தொடர்நந்து நீதிபதிகள், கைது செய்யப்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு மேல் சிறையில் உள்ள நிலையில் இதற்கு மேலும் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க என்ன தேவை இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் அவர்கள், “கள்ளச்சாராய விற்பனை பல ஆண்டுகளாக நடைபெறுகிறது. கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் கள்ளச்சாரயம் தயாரிப்பு மற்றும் விற்பனையும் பல ஆண்டுகளாக நடக்கிறது.
மதுவிலக்குத் துறை என்னதான் செய்துகொண்டிருக்கிறது?. மதுவிலக்கு போலீசார் பதிவு செய்யும் வழக்குகளில் பல வழக்குகள் ஜோடிக்கப்பட்டவை. முதன்மையான குற்றவாளிகளை கைது செய்வதில்லை. மதுவிலக்கு போலீசார் பல தவறுகளை செய்கின்றனர். அவ்வாறு செய்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவில்லை” என்றும் குறிப்பிட்டனர்.
இதற்கு அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “இந்த கள்ளச்சாராயம் கள்ளக்குறிச்சியில் தயாரிக்கப்பட்டது இல்லை. மாதவரத்தில் இருந்து வந்திருக்கிறது. இதற்கும் கல்வராயன் மலைக்கும் தொடர்பு இல்லை.
இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டிருக்கிறது. ஆவணங்கள் இன்றோ நாளையோ சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும். கள்ளக்குறிச்சி சம்பவத்தை பொறுத்தவரை 70 பேர் உயிரிழப்பு…. 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு… 100 நாட்களுக்கும் மேல் அசாதாரண நிலை ஆகியவற்றின் காரணமாகவே குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று வாதிட்டார்.
இந்நிலையில் மனுதாரர் தரப்பு வாதங்களை ஏற்று, அவர்கள் மீதான குண்டர் சட்டத்தை நீதிபதிகள் ரத்து செய்தனர்.
பத்திரிகையாளர் கொடூரக் கொலை: பதறவைக்கும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்!
பொங்கல் சிறப்பு பேருந்துகள் : எத்தனை? எங்கெங்கிருந்து இயக்கம்?