இந்தியா
பொங்கல் சிறப்பு பேருந்துகள் : எத்தனை? எங்கெங்கிருந்து இயக்கம்?

பொங்கல் சிறப்பு பேருந்துகள் : எத்தனை? எங்கெங்கிருந்து இயக்கம்?
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14 ஆயிரத்துக்கும் அதிகமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் வரும் 13ஆம் தேதி தொடங்குகிறது. 13 போகி, 14 சூரியன் பொங்கல், 15 மாட்டு பொங்கல், 16 காணும் பொங்கல் கொண்டாடப்படவுள்ளது.
பொங்கலுக்கு முன்னும் பின்னும் வார விடுமுறை வருகிறது. இடையில் வரும் ஜனவரி 17ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை வருகிறது.
இந்த நிலையில் சென்னை உட்பட வெளியூரில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகளை இயக்க தலைமை செயலகத்தில் துறை அதிகாரிகளுடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டார்.
இதன்பின் செய்தியாளார்களைச் சந்தித்த அவர், “வரும் 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை தினசரி இயங்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,736 சிறப்பு பேருந்துகள் என நான்கு நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 14,104 பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படும்.
பிற ஊர்களில் இருந்து 7,800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஒட்டுமொத்தமாக பொங்கல் பண்டிகைக்கு 21,904 இயக்கப்படவுள்ளன.
கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு ஆகிய மூன்று பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
பொங்கல் முடிந்த பிறகு, 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தினசரி இயங்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,790 சிறப்பு பேருந்துகள் சென்னைக்கு இயக்கப்பட இருக்கிறது.
மற்ற முக்கிய ஊர்களில் இருந்து 6,926 பேருந்துகள் என மொத்தம் 22,676 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இந்த பேருந்துகளை முன்பதிவு செய்துகொள்வதற்கு கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 7 முன்பதிவு மையங்கள் செயல்படும். கோயம்பேட்டில் 2 முன்பதிவு மையங்கள் செயல்படும்.
இதுதவிர https://www.tnstc.in/OTRSOnline/ என்ற இணையதளத்திலும் டிஎன்எஸ்டிசி ஆப் வாயிலாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
அதேபோல ஆம்னி பேருந்துகள் கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் செல்லும் வழியில் சாலை இருபுறமும் பேருந்துகளை நிறுத்தினார்கள் என்று புகார் வந்தது.
எனவே இந்த முறை இதுபோன்று சாலைகளில் பேருந்துகளை நிறுத்தி ஏற்றினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் செல்லும் வழியிலும், மதுரவாயல் டோல்கேட்டிலும் பேருந்தகளை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இதுதொடர்பாக போக்குவரத்து துறை ஆணையர், ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
பொங்கலுக்கு பொதுமக்கள் ஊருக்கு செல்லும் போது டோல்கேட்டுகளில் போக்குவரத்து இடையூறு இல்லாமல் செல்வதற்கு, குறிப்பிட்ட நேரத்தில் டோல்கேட்டை திறந்து வைப்பதற்கு நகாய் அமைப்புடன் பேசப்படும்.
இந்த ஆண்டு 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார்களில் செல்பவர்கள் திருச்சி – சென்னை நெடுஞ்சாலைகளை தவிர்த்து ஓஎம்ஆர், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் வழியாக சென்றால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்கும்” என்று கூறினார்.
ஆளுநர் வெளிநடப்பு… ஸ்டாலின் டூ விஜய்… ரியாக்ஷன் என்ன?