இந்தியா
மாஜி அமைச்சர் வழக்கு சிபிஐக்கு மாற்றம் : நீதிமன்றம் அதிரடி!

மாஜி அமைச்சர் வழக்கு சிபிஐக்கு மாற்றம் : நீதிமன்றம் அதிரடி!
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறி அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த இந்த வழக்கில் கைதான ராஜேந்திர பாலாஜி தற்போது ஜாமினில் வெளியில் உள்ளார்.
இந்நிலையில் சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன், 2021ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரி மனு தாக்கல் செய்தார்.
ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் என்பதால் அவரது அரசியல் செல்வாக்கு காரணமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில் நீதிபதி வேல்முருகன் முன் இவ்வழக்கு இன்று (ஜனவரி 6) விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில், ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் என்பதால் வழக்கில் அரசு அனுமதிக்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, நீதிமன்றத்தின் உத்தரவு அமல்படுத்தவில்லை என்பதால் அந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
தமிழக அரசுக்கு நீதிமன்ற உத்தரவை பின்பற்ற நேரம் இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதி வேல்முருகன், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார்.
வழக்குத் தொடர்பான ஆவணங்களை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சிபிஐயிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார்.