இந்தியா
’யார் அந்த சார்’ பேட்ஜுடன் பேரவைக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!

’யார் அந்த சார்’ பேட்ஜுடன் பேரவைக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!
முதல்நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் ‘யார் அந்த சார்’ என்ற பேட்ஜை சட்டையில் அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதற்காக தலைமை செயலகத்திற்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்ற உள்ளார்.
இந்த கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன.
இந்த நிலையில் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் ‘யார் அந்த சார்’ என்ற பேட்ஜை சட்டையில் அணிந்து பேரவைக்குள் வருகை தந்துள்ளனர்.
முன்னதாக அதிமுக மாணவரணிச் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் அண்ணா பல்கலைக்கழக வாசலில் போராட்டம் நடத்த குவிந்த நிலையில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.