இந்தியா
அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : அதிமுக வட்ட செயலாளர், காவல் ஆய்வாளர் கைது!

அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : அதிமுக வட்ட செயலாளர், காவல் ஆய்வாளர் கைது!
சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், அதிமுக வட்ட செயலாளர் மற்றும் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகிய இருவரை சிறப்பு புலனாய்வுக் குழு இன்று (ஜனவரி 7) கைது செய்துள்ளது.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து அவரது பெற்றோர் தங்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவன் மீது அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் புகார் அளிக்கச் சென்றனர்.
அப்போது, காவல் ஆய்வாளர் தாக்கியதாகவும், சிறுவனின் பெயரைப் புகாரில் இருந்து நீக்க வற்புறுத்தியதாகவும் சிறுமியின் பெற்றோர் வீடியோ வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்தனர். அப்போது இந்த வழக்கு விசாரணையில் போலீசாரின் நடவடிக்கையின் மீதும் கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
இதனை எதிர்த்து சென்னை காவல்துறை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. அப்போது போலீசாரின் விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு அதிருப்தி தெரிவித்தது. மேலும் சி.பி.ஐ விசாரணை தேவையில்லை. தமிழக காவல் துறையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டது.
அதன்படி இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட சதீஷுக்கு உதவி செய்ததாக அதிமுக 103வது வட்ட செயலாளர் சுதாகரையும், வழக்கை சரியாக விசாரிக்காத மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜியையும் சிறப்பு புலனாய்வுக் குழு இன்று கைது செய்துள்ளது.