இந்தியா
ஈரோடு கிழக்கு… திமுகவுக்குள் பேசப்படும் குறிஞ்சி சிவகுமார்

ஈரோடு கிழக்கு… திமுகவுக்குள் பேசப்படும் குறிஞ்சி சிவகுமார்
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தேதி அகில இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவித்திருக்கிறார் தேர்தல் ஆணையர்.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இடைத்தேர்தல்களுக்கு முக்கிய பங்கு உண்டு.
அந்த வகையில் இந்த இடைத்தேர்தலும் முக்கியமான கட்டத்தில் தான் நடக்க இருக்கிறது.
பெரியார் குடும்பத்தின் காங்கிரஸ் ஆளுமை முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவன் மறைவை அடுத்து அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தொகுதியில் போட்டியிடுவதற்கு பல்வேறு கட்சிகளும் தங்களது வியூகத்தை வகுத்து வருகின்றன.
திமுக கூட்டணியில் இந்தத் தொகுதி 2021 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. எனவே இத்தொகுதியில் காங்கிரஸே மீண்டும் போட்டியிட வேண்டும் என்று ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றி மாநிலத் தலைமைக்கு அனுப்பி வைத்தது.
அதேநேரம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்குப் பின் சில நாட்களிலேயே… ‘இந்தத் தொகுதியில் இம்முறை திமுகவே போட்டியிட வேண்டும்’ என்று ஈரோடு மாவட்ட திமுக நிர்வாகிகள் தலைமைக்கு வேண்டுகோள் வைக்கத் தொடங்கிவிட்டனர். ஈரோட்டுக்கு சென்ற முதல்வர், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரிடமும் இந்த வேண்டுகோளை அவர்கள் வைத்துள்ளனர்.
”ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அளவுக்கு வலிமையான வேட்பாளர் காங்கிரஸில் தற்போது இல்லை. மேலும் செலவு முழுதும் நாம்தான் செய்யப் போகிறோம். எனவே திமுக போட்டியிடுவதே நல்லது” என்று திமுக இளைஞரணிப் பிரமுகர்களும் உதயநிதியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
கூட்டணிக் கட்சிகளை ஆலோசித்து முதல்வர் முடிவு செய்வார் என்று இந்த விவகாரம் பற்றி இன்று (ஜனவரி 7) துணை முதல்வர் உதயநிதி கூறியுள்ளார்.
இந்நிலையில் ஈரோடு திமுக வட்டாரத்தில் பேசியபோது, ”காங்கிரஸின் சம்மதத்தோடு இம்முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். இதற்காக திமுகவில் பலர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
மாவட்ட துணைச் செயலாளர் செல்லப்பொன்னி மனோகரன், இன்னொரு மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் குமாரசாமி, மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோரது பெயர்கள் பேசப்பட்டு வருகின்றன.
ஆனால் இவர்களை எல்லாம் தாண்டி இன்னொரு திமுக பிரமுகரின் பெயர் சென்னையின் குறிஞ்சி இல்லம் வரை பேசப்பட்டிருக்கிறது. அவர்தான் குறிஞ்சி சிவகுமார்.
இவரது தந்தை ம.நாராயணசாமி திமுகவின் ஆரம்ப காலத்தில் இருந்தே உறுப்பினர். தந்தையின் மூலமாக சிறுவயதில் இருந்தே திமுக நிகழ்ச்சிகளுக்கு செல்ல ஆரம்பித்த குறிஞ்சி சிவகுமார், 1989 இல் இருந்து திமுகவின் உறுப்பினர்.
வார்டு பொறுப்பில் ஆரம்பித்து, நகர, மாவட்ட பிரதிநிதி, ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட பிரதிநிதி என பதவிகளை வகித்த குறிஞ்சி சிவகுமார் தற்போது மாநில விவசாய அணி இணைச் செயலாளர் பொறுப்பில் உள்ளார்.
1996, 2001, 2006 தேர்தல்களில், மாவட்ட அளவில் தேர்தல் பொறுப்பாளராகவும், 2019 வேலூர் நாடாளுமன்றத் தேர்தலின் போது அந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளராகவும், அதே 2019 இல் கரூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளராகவும், 2021 சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி தொகுதி பொறுப்பாளராகவும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் நீண்ட நெடிய கட்சிப் பணிக்கு சொந்தக்காரர்.
2016 சட்டமன்றத் தேர்தலில் பவானி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். 2018 ஆம் ஆண்டு நடந்த ஈரோடு மண்டல திமுக மாநாட்டின் நிதிக்குழு உறுப்பினராக செயல்பட்டவரும் கூட.
இந்த பின்னணியில் குறிஞ்சி சிவகுமாரின் பெயரும் திமுக போட்டியிடும் பட்சத்தில் வேட்பாளர் பட்டியலில் முன் வரிசையில் இருக்கிறது என்கிறார்கள்.
மேலும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட வார்டு, பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் குறிஞ்சி. மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களே முக்கிய பதவியில் அமர்த்தப்படுகின்றனர் என்ற வருத்தம் பரம்பரை, பாரம்பரிய திமுகவினர் மத்தியில் இருக்கிறது. அதைப் போக்கும் வகையில் கட்சியின் சோதனைக் காலத்தில் உழைத்த குறிஞ்சி சிவகுமாருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும், வழங்குவார் முதல்வர் ஸ்டாலின்“ என்கிறார்கள் நம்பிக்கையோடு!