நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 08/01/2025 | Edited on 08/01/2025

பா.ஜ.க. எம்.பி. மற்றும் நடிகையுமான கங்கனா ரனாவத், இயக்கி நடித்துள்ள இந்தி படம் ‘எமர்ஜென்சி’. இப்படம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, ஆட்சியில் இருக்கும்போது அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இவருடன் அனுபம் கெர், சதீஷ் கௌசிக், பூமிகா சாவ்லா, ஷ்ரேயாஸ் தல்படே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்பு மாற்றப்பட்டது. 

முன்னதாக இப்படத்தின் ட்ரைலர் வெளியான சமயத்தில் சீக்கியர்கள் உணர்வுக்கு எதிராக இப்படம் இருப்பதாக கூறி எதிர்ப்புகள் கிளம்பியது. இப்படக்குழு சென்சார் சான்றிதழ் வாங்குவதில் பிரச்சனை நீடித்து வந்தது. அது கோர்ட் வரை சென்று பின்பு முடிவுக்கு வந்தது. பின்பு இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. ஜனவரி 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இரண்டாவது ட்ரைலர் கடந்த 6ஆம் தேதி வெளியாகியிருந்தது. படத்தின் ரிலீஸுக்கு இன்னும் கொஞ்ச நாட்களே உள்ள நிலையில் தற்போது புரமோஷன் பணிகளில் படக்குழு தொடங்கியுள்ளது.

Advertisement

இந்த நிலையில் கங்கனா ரனாவத், இந்திரா காந்தியின் பேத்தியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.பி. பிரியங்கா காந்தியை ‘எமர்ஜென்சி’ படம் பார்க்க அழைத்துள்ளார். இதனை ஒரு ஊடகத்திடம் அவர் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது, “நான் பிரியங்கா காந்தியை நாடாளுமன்றத்தில் சந்தித்தேன். அப்போது அவரிடம் முதலில் நான் சொன்னது, எமர்ஜென்சி படத்தை நீங்கள் பார்க்க வர வேண்டும். அதற்கு அவர் முடிந்தால் வருகிறேன் என்று பதிலளித்தார். நான் இந்தப் படத்திற்காக நான் ஆராய்ச்சியில் இறங்கிய போது, அவரது திருமண உறவு, நண்பர்கள் உறவு மற்றும் சர்ச்சையான விஷயங்கள்… இது போல அவரது தனிப்பட்ட விஷயங்களை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். அவரை கண்ணியமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சித்தரித்துள்ளேன். மூன்று முறை பிரதமராக இருப்பது சாதாரணமான விஷயம் இல்லை. இந்தப் படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.