சினிமா
‘கங்குவா’வில் விட்டதை பிடிப்பாரா சூர்யா? – ‘ரெட்ரோ’ ரிலீஸ் எப்போது?

‘கங்குவா’வில் விட்டதை பிடிப்பாரா சூர்யா? – ‘ரெட்ரோ’ ரிலீஸ் எப்போது?
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் மே1-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு இன்று (ஜனவரி 8) அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பின்னடைவை சந்தித்தது. இதனால் சூர்யா நடித்து வரும் ரெட்ரோ திரைப்படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு குவிந்துள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயம் ரவி, ஜோஜூ ஜாஜ், கருணாகரன், நாசர் என முக்கிய நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
அந்தமான் தீவு, ஊட்டி, கேரளா, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. அண்மையில் ரெட்ரோ படத்தின் டீசர் வெளியானது. ஒருபக்கம் ரொமான்டிக், மறுபக்கம் ஆக்ஷன் என சூர்யாவின் நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்தநிலையில், ரெட்ரோ திரைப்படம் மே 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு இன்று அறிவித்துள்ளது. இந்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருந்த விடாமுயற்சி ஒத்திவைக்கப்பட்டது. அதே நேரத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு அஜித், சூர்யா, தனுஷ் நடிக்கும் இட்லி கடை உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மற்றும் திரையரங்கு வட்டாரத்தில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.