நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 08/01/2025 | Edited on 08/01/2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நித்யா மெனன், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காதலிக்க நேரமில்லை’. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் யோகி பாபு, வினய், லால், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் முதற்கொண்டு வெளியான அனைத்து போஸ்டர்களிலும் நித்யா மெனன் பெயரை முதலில் குறிப்பிட்டு அடுத்ததாக ஜெயம் ரவி பெயரை படக்குழு குறிப்பிட்டிருந்தனர். 

இந்தப் படத்தின் முதல் பாடலான ‘என்னை இழுக்குதடி…’ பாடல் முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் தீ குரலில் துள்ளல் கலந்த இசையுடன் அமைந்துள்ள இப்பாடல் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இரண்டாவது பாடலாக ‘லாவெண்டர் நேரமே…’ என்ற பாடல் வெளியானது. இதுவும் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. பின்பு அண்மையில் மூன்றாவது பாடலாக ‘இட்ஸ் பிரேக் அப் டா…’(IT’S A BREAK-UP DA) பாடல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதை பார்க்கையில், ஜெயம் ரவியால் நித்யா மெனன் கர்ப்பமாவது போலவும் ஆனால் அவருக்கு வேறொரு கேர்ள் ஃபிரண்ட் இருப்பதாகவும் தெரிகிறது. இதையடுத்து நித்யா மெனன் ஜெயம் ரவியை கல்யாணம் செய்தாரா இல்லையா என்பதை கலகலப்பாக இப்படம் சொல்லவுள்ளதாக யூகிக்க முடிகிறது.

Advertisement

அதே சமயம் கலாச்சாரம், பெண்ணியம் குறித்தும் இப்படத்தில் பேசப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. அதற்கேற்றாற்போல், ‘உன் வெஸ்டர்ன் ஐடியாலாம் வேற நாட்டுல வச்சிக்கோ…இது இந்தியா’ என யோகி பாபு பேசும் வசனம், ‘இப்பலாம் குழந்தை பெத்துக்கறதுக்கு ஆம்பள தேவையில்லை..’ என நித்யா மெனன் பேசும் வசனம், ‘எல்லா பொம்பளைங்களும் உங்களோட ஃபெமினிஸ்ட் ஆங்கில எல்லா விஷயத்திலும் கொண்டு வந்து திணிக்காதீங்க’ என ஜெயம் ரவி பேசும் வசனம் அமைந்துள்ளது. இந்த ட்ரைலர் தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் பொங்கலை முன்னிட்டு வருகிற 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.