இலங்கை
ரொஹிங்யர்களை நாடுகடத்துவது பெரும் குற்றம்! ஹக்கீம் தெரிவிப்பு!

ரொஹிங்யர்களை நாடுகடத்துவது பெரும் குற்றம்! ஹக்கீம் தெரிவிப்பு!
இலங்கைக்குள் தஞ்சமடைந்துள்ள ரொஹிங்யர்களை நாடுகடத்துவது பாரதூரமாக குற்றச்செயலாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
ரொஹிங்யர்களுக்கு அவர்கள் வாழும் நாட்டில் நடக்கும் சித்திரவதைகளை முழு உலகமும் அறியும். தமது நாட்டில் தொடர்ந்தும் தம்மால் வாழவோ அல்லது தாக்குப் பிடிக்கவோ முடியாது என்ற நிலையில்தான் அவர்கள் தமது மண்ணை விட்டு வெளியேறுகின்றனர். சிறுபிள்ளைகள் சகிதம் தஞ்சமடைந்துள்ள அவர்களை பாதுகாப்பதும், பராமரிப்பதும் அவசியமாகும்.
மாறாக அவர்களை மீண்டும் அவர்களின் நாட்டுக்கே அனுப்புவது பாரதூரமான குற்றச் செயலாகவே அமையும். எனவே, மியான்மருக்கு அவர்களை அனுப்பாது, வேறு நாடுகளுக்கு அனுப்புவதற்கு ஐ.நா. ஊடாக உதவிகளை பெறுவதே ஏற்புடைய நடவடிக்கையாகும் – என்றார்.
இதையடுத்துக் கருத்துத் தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, ‘இலங்கைக்குள் புகலிடக்கோரிக்கையாளர்கள் என அடையாளம் காணப்பட்டால் சர்வதேச சட்டத்திட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நாடு கடத்தல் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை. இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முதற்கட்ட கலந்துரையாடல்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன’ என்றார். (ப)