சினிமா
ஜோக்கர் டூ ஹீரோ… யார் இந்த வித்தைக்காரன் குரு சோமசுந்தரம்?

ஜோக்கர் டூ ஹீரோ… யார் இந்த வித்தைக்காரன் குரு சோமசுந்தரம்?
குரு சோமசுந்தரம். தான் ஏற்கும் பாத்திரங்களைத் திரையில் அழுத்தமாக வெளிப்படுத்தும் நடிப்புக் கலைஞர்களில் ஒருவர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ‘யார் இவர்’ என்று கேட்கும்படியான திரை இருப்பை வெளிப்படுத்தி வருபவர். ஒவ்வொரு படத்திலும் இவர் ஏற்கும் பாத்திரத்தின் வார்ப்பு வெவ்வேறு மாதிரியாக இருக்கும்.
தோற்றம், உடலசைவு, குணாதிசயம், சிந்தனை, செயல்பாடு என்று ஒட்டுமொத்தமாக இன்னொரு மனிதரை நம் கண்ணில் காட்டவல்லது அவரது நடிப்பு பாணி. அது அத்தனை எளிதல்ல.
அதனாலேயே, ‘ஆரண்ய காண்டம்’ படம் தொடங்கி ‘பாட்டில் ராதா’ வரை கடந்த பதினைந்து ஆண்டு காலத்தில் குரு சோமசுந்தரம் நடித்த படங்களின் எண்ணிக்கை நாற்பதை இன்னும் தொடவில்லை.
போலவே, தமிழ் தொடங்கி மலையாளம், தெலுங்கு, இந்தி என்று ‘பான் இந்தியா’ நட்சத்திரம் ஆகும் கணக்குகளும் அவரிடத்தில் அறவே கிடையாது. அருவிச் சுனையில் ஊற்றெடுக்கும் நீர் பெருகித் தாழ்வாரம் நோக்கிப் பாய்வது போன்று இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கிறது இவரது உலகம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வட்டாரத்தைச் சுற்றிச் சுழன்றது குரு சோமசுந்தரத்தின் பால்ய காலம். பள்ளி, பாலிடெக்னிக் படிப்பை முடித்தபிறகு, வாலிபப் பருவத்தில் பிழைப்பு தேடி வெவ்வேறு இடங்களைத் தேடி ஓடினார் குரு சோமசுந்தரம். ஆனாலும், அவரது மனம் முழுவதும் நடிப்பு ஆசையே நிறைந்து நின்றது. அதனால், அவர் சென்னைக்கு இடம்பெயர்ந்தார்.
ஆநாசர் போன்ற சில நடிப்பாளுமைகளின் நட்பு, குரு சோமசுந்தரத்தை ‘கூத்துப்பட்டறை’க்கு இழுத்துச் சென்றது. சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக அங்கு அவரது குருகுல வாசம் அமைந்தது.
வீதி நாடகம், மேடை நாடகம் என்று நிகழ்த்து கலைகளின் பல்வேறு வடிவங்கள் குறித்த பார்வை அங்கு அவருக்குக் கிடைத்தது. தொடர்ச்சியாக நாடகப் பயிற்சி, ஒத்திகைகள், மேடையேற்றங்கள் என்று கழிந்திருக்கிறது அந்த காலகட்டம்.
நடிப்பு தவிர்த்து ஒரு நாடகத்தின் பின்னணியில் இருக்கும் அனைத்து விதமான உழைப்பையும் அறியும் வாய்ப்பினை அவருக்குத் தந்தது கூத்துப்பட்டறை.
குரு சோமசுந்தரம் மட்டுமல்லாமல், அவரது முன்னத்தி ஏர்கள் பலருக்கும் கிடைத்த வரப்பிரசாதம் அது. அப்படிப்பட்ட ஆழ்ந்த அஸ்திவாரமே, பின்னாட்களில் திரையில் பாராட்டுக்குரிய பல பாத்திரங்களில் அவர் பொருந்தக் காரணமானது.
நாடகங்களில் தொடர்ச்சியாக இயங்கி வந்த காலத்தில், இயக்குனர் தியாகராஜன் குமாராஜாவினால் ‘ஆரண்ய காண்டம்’ படத்தில் வாழ்ந்து கெட்ட ஜமீன் வாரிசாகத் தோன்றினார் குரு சோமசுந்தரம். காளையன் என்கிற அப்பாத்திரம், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளையைப் போல அவரது நடிப்பின் வீச்சைப் பலமாக வெளிப்படுத்தியது.
பிறகு கடல், 5 சுந்தரிகள், பாண்டிய நாடு, ஜிகர்தண்டா, 49 ஓ படங்களில் நடித்தார் குரு சோமசுந்தரம். அப்படங்களில் அவரது முகத்தை நாம் தேட வேண்டியிருக்கும். ஏனென்றால், அப்பாத்திரங்களின் இயல்பே அப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
ஆனால், ராஜு முருகனின் ‘ஜோக்கர்’ படமானது குரு சோமசுந்தரத்தின் மீதான கவனக் குவிப்பை மேலும் பல படிகள் முன்னகர்த்தியது. அதில் அவர் ‘மன்னர் மன்னனாக’ தோன்றியதும், அதற்கு ரசிகர்கள் தந்த வரவேற்பும் கற்பனைக்கு அப்பாற்பட்டவை.
ஜோக்கர் தந்த தாக்கத்தினால் யாக்கை, ஓடு ராஜா ஓடு படங்களில் அவரது பாத்திரத்தை ஏற்க ரசிகர்கள் தயங்கினர். அந்த வரிசையில் மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்தது ‘வஞ்சகர் உலகம்’.
பிறகு பேட்ட, மாறா, ஜெய்பீம், மாமனிதன், ஏஜெண்ட் கண்ணாயிரம் என்று தொடர்ந்தது குரு சோமசுந்தரத்தின் ராஜ பாட்டை.
இப்படங்களுக்கு நடுவே, ‘மின்னல் முரளி’யில் ஷிபுவாகத் தோன்றி சர்வதேச அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் குரு சோமசுந்தரம். கொரோனா காலகட்டத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது அப்படம். டீசர், ட்ரெய்லர் எல்லாம் குறிப்பிட்ட சில ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன.
‘கிராமத்தை மையமாகக் கொண்ட பேண்டஸி அட்வெஞ்சர் படமெல்லாம் பெருவாரியான வரவேற்பைப் பெறுமா’ என்று எக்காளம் பெருகிய நேரத்தில், மிகப்பெரிய அலையை உண்டுபண்ணியது அதன் வெற்றி.
வில்லன் பாத்திரம் என்பதையும் தாண்டி, அவருக்குப் பெருமளவு ரசிகர்களைப் பெற்றுத் தந்தது அப்படம். தொடர்ந்து யாத்திசை, பயமறியா பிரமை, பரோஸ், ஹெர் என்று தொடர்கிறது குரு சோமசுந்தரத்தின் திரைப்பயணம்.
தற்போது தமிழுக்கு இணையாக மலையாளத்திலும் பல வாய்ப்புகள் அவரைத் தேடி வருகின்றன. பாத்திரமாகவே தான் உருமாற வேண்டுமென்கிற அவரது விருப்பத்திற்குத் தீனி போடவல்லைவை அக்கதைகள்.
அனைத்துக்கும் நடுவே ‘ஜோக்கர்’ போன்று ‘பாட்டில் ராதா’விலும் கதை நாயகனாகத் தோன்றும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார் குரு சோமசுந்தரம்.
விளையாட்டு மைதானத்தில் வெவ்வேறு போட்டிகளில் அடுத்தடுத்து பங்கேற்கும் குழந்தையின் உற்சாகம் போன்றே, தனக்கானதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு தொடர்ந்து செயல்படுகிற வாய்ப்பும் மனதும் மிகச்சில கலைஞர்களுக்கே வாய்க்கும்.
அந்த வகையில், எதிர்காலத்தில் இன்னும் பல பிரமிப்புக்குரிய சாதனைகளை நிகழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பினை நம்முள் நிறைத்து வைக்கிறார் குரு சோமசுந்தரம்.
புதிய களங்கள், கதைகள், கதாபாத்திரங்கள் சூழ் உலகத்தில், அவரது தனித்துவம் மேலும் பல மடங்கு மிளிர வேண்டும் என்பதே நம்மைப் போன்ற ரசிகர்களின் விருப்பம்..!
அந்த கேள்வியை கண்ணாடியை பார்த்து கேளுங்க… எடப்பாடிக்கு அமைச்சர் சிவசங்கர் பதில்!