நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 09/01/2025 | Edited on 09/01/2025

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள திருமலை ஏழுமலையான் கோவிலில் நாளை(10.01.2025) வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் பிரவேசம் செய்யப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இலவச தரிசன டோக்கன் வாங்க 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று(08.01.2025) திருப்பதியில் குவிந்தனர். இதனால் அங்குக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக நிகழ்ந்த தள்ளு முள்ளால் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.

மேலும் பலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். அவர்களை மீட்டு உடனடியாக திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா ராம்நாராயண் ரூயா அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதே சமயம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

Advertisement

இந்த சம்பவத்தின் காரணமாக தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவின் பட விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. பாபி இயக்கத்தில் பாலகிருஷ்ணா, பாபி தியோல், பிரக்யா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம்  ‘தாகு மஹாராஜ்’. சித்தாரா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இன்று ஆந்திரா பிரதேசத்தில் உள்ள அனந்தபூர் பகுதியில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் திருப்பதியில் நடந்த துயர சம்பத்தின் காரணமாக இப்பட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இறந்தவர்களுக்கு அஞ்சலியும் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது.