
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 09/01/2025 | Edited on 09/01/2025

இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் ஜி.வி. பிரகாஷ், நடிகராக இடி முழக்கம், 13, கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக விக்ரமின் வீர தீர சூரன், தனுஷின் இட்லி கடைஉள்ளிட்ட பல படங்களை வைத்துள்ளார்.
இதில் கிங்ஸ்டன் படத்தில் அவர் நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பணியாற்றி இசைப் பணிகளையும் மேற்கொள்கிறார். இப்படம் நடிகராக அவரது 25வது படமாகும். இப்படத்தின் பூஜையில் கமல்ஹாசன் நேரில் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். கமல் பிரகாஷ் இயக்கும் இப்படத்தில் திவ்ய பாரதி கதாநாயகியாக நடிக்கிறார். முன்னதாக படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரில் இந்தியாவில் முதல் முறையாக கடலை பின்னணியாகக் கொண்டு ஃபேண்டஸி அட்வென்சர் ஜானரில் இப்படம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்றார் போல் காட்சிகளும் பரபரப்பாக அமைந்துள்ளது. இப்படம் மார்ச் 7ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.