நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 10/01/2025 | Edited on 10/01/2025

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி கதாநாயகனாகவும் அதிதி ஷங்கர் கதாநாயகியாகவும் நடித்திருக்கும் திரைப்படம் நேசிப்பாயா. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இப்படத்தின் மூலம் ஆகாஷ் முரளி தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். மேலும் இப்படத்தில் சரத்குமார், பிரபு, குஷ்பு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படம் வருகிற ஜனவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் படத்தின் இயக்குநர் விஷ்ணுவர்தன் மற்றும் கதாநாயகன் ஆகாஷ் முரளி ஆகியோரை நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக சந்தித்தோம். இருவரும் படம் தொடர்பான பல சுவாரஸ்ய தகவல்களை நம்மிடையே பகிர்ந்துகொண்டனர். அப்போது விஷ்ணுவர்தனிடம் யுவன் சங்கர் ராஜா உடனான பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “யுவன் எனக்கு நல்ல நண்பர். அதற்காகத் தினமும் ஒன்றாகச் சேர்ந்து வா மச்சான் என்று சுற்றும் அளவிற்கு இல்லை. அவருடனான நட்பு எனக்கு பள்ளிப் பருவ காலத்தில் இருந்து இருக்கிறது.

Advertisement

இன்றைக்கு நான் இந்த நிலைமையில் இருக்க நிச்சயமாக யுவன் சங்கர் ராஜாவும் ஒரு காரணம். ஓப்பனாக சொல்லவேண்டுமென்றால் ஆரம்பத்தில் அவரின் பாட்டை கேட்க யாரும் வரவில்லையென்றால் என்னுடைய அறிந்தும் அறியாமலும் படத்தைப் பார்க்க வந்திருக்க மாட்டார்கள். உண்மை அதுதான் அந்த படத்தில் உள்ள பாடலுக்காகத்தான் அனைவரும் படம் பார்க்க வந்தார்கள். அதன் பிறகு என்னுடைய கம்போர்ட் ஜோனை பிரேக் பண்ணுவதற்காக யுவன் இல்லாமல் என்னுடைய திறமையை வெளிப்படுத்த முயற்சி எடுத்தேன் அங்கேயும் யுவன் சங்கர் ராஜாதான் இருந்தார். ஏனென்றால் அப்படிப்பட்ட இசையமைப்பாளர் அவர். 

யுவன் போய்விட்டார், யுவன் கம்பேக் கொடுத்துவிட்டார் என்ற பேச்சுக்கே இடமில்லை. யுவன் எப்போதும் இசையில் நிலைத்து இருக்கிறார். அதை யாராலும் மாற்ற முடியாது. மெலடியில் அவர் பின்னி எடுப்பார். குறிப்பாக நேசிப்பாயா படத்தின் பின்னணி இசையில் அவர் ஆடியன்ஸை அழ வைத்துவிடுவார். நடிகர்கள் நடிப்பு ஒரு காட்சியில் எனக்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லையென்றால் யுவன் அந்த இடத்தில் தனது விரலை விட்டு நோண்டி எடுத்துருவாரு. அந்தளவிற்கு அவரின் இசையின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.