நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 10/01/2025 | Edited on 10/01/2025

ரங்கோலி படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகி இருக்கும் திரைப்படம் மெட்ராஸ் காரன். பொங்கல் ரேஸில் களம் இறங்கி இருக்கும் இந்த திரைப்படம் எந்த அளவு வரவேற்பை பெற்றது..?

மெட்ராஸ் காரராக தன்னை காட்டிக் கொள்ளும் நாயகன் ஷேன் நிகாம் நாயகி நிஹாரிக்காவை திருமணம் செய்து கொள்ள தன் சொந்த ஊரான புதுக்கோட்டையில் திருமணம் ஏற்பாடு செய்கிறார். திருமணத்திற்கு முந்தைய நாளான மாலை தன் காதலி நிஹாரிக்கவை சந்திக்க தனிமையில் செல்லும் நாயகன் ஷேன் நிகாம் வழியில் கர்ப்பிணி பெண்ணான ஐஸ்வர்யா தத்தாவை தன் காரில் இடித்து தள்ளி விபத்து ஏற்படுத்தி விடுகிறார். அதில் வயிற்றில் இருக்கும் ஐஸ்வர்யா தத்தாவின் குழந்தை இறந்து விடுகிறது. இதனால் நாயகன் ஷான் நிகாமின் திருமணம் நின்று போய் விடுவது மட்டுமல்லாது அவர் இரண்டு வருடம் சிறைக்கும் சென்று விடுகிறார். அவரது வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடுகிறது. இரண்டு வருடங்கள் கழித்து வெளியே வரும் அவருக்கு அந்த விபத்தில் இறந்த குழந்தைக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று உண்மை தெரிய வருகிறது. இதனால் அதிர்ச்சி அடையும் அவர் உண்மையான குற்றவாளியை தேடி செல்கிறார். உண்மையில் அந்த விபத்தில் நடந்தது என்ன? குழந்தை மரணத்திற்கு யார் காரணம்? என்பதுதான் இப்படத்தின் மீதி கதை. 

Advertisement

ஒரு சாதாரண ஒற்றை வரி கதையை வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஓடும் அளவிற்கு படத்தை விறுவிறுப்பாக கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் வாலி மோகன் தாஸ். தன் முந்தைய படமான ரங்கோலி மூலம் தமிழ் சினிமாவை சற்றே திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் வாலி மோகன் தாஸ், தன் முந்தைய படத்தில் கிடைத்த வரவேற்பை இந்த படத்திலும் பெற முயற்சி மட்டுமே செய்திருக்கிறார். படம் ஆரம்பித்து திருமண நிகழ்வு மற்றும் அதை சுற்றி நடக்கும் சடங்குகள் என விரிகிறது கிட்டத்தட்ட முதல் பாதி முழுவதும் அதுவே படர்ந்து காணப்படுகிறது.

இடைவேளைக்கு முன்புதான் கதை ஆரம்பிக்கிறது. கதை ஆரம்பித்து செல்ல செல்ல விறுவிறுப்பாக கதைக்குள் செல்லும் திரைப்படம் போகப் போக கதையை விட்டு விலகி எங்கெங்கோ போய் எதை எதையோ கூறி பல திசைகளில் சுற்றி திரிந்து கடைசியில் விட்ட இடத்திலேயே வந்து சாதாரண கிளைமாக்ஸ் ஆக முடிகிறது. விபத்தில் என்ன நடந்திருக்குமோ, ஏது நடந்திருக்குமோ, இவர் செய்தாரா, அவர் செய்தாரா, அப்படி செய்திருந்தால் எதனால் செய்திருக்கிறார்கள், அவர்களின் தண்டனை என்ன… இதுபோன்ற கேள்விகள் படம் முழுவதும் தென்பட்டாலும் அதற்கேற்றார் போல் திரை கதையும் அடுத்து என்ன அடுத்து என்ன என்பது போல் இருந்தாலும் கதைக்கும் திரைக்கதை காட்சி அமைப்புகளுக்கான இடைவெளி என்பது படம் போகப் போக இறுதி கட்டத்தில் தெளிவில்லாமல் எங்கெங்கோ பயணித்து கடைசியில் முன்விரோதம் என்ற ஒற்றை கதை கருவை மட்டும் கூறி படத்தை முடித்துள்ளது சற்றே அயர்ச்சியை கொடுத்துள்ளது. அதேபோல் மெட்ராஸ் காரன் என கூறிவிட்டு படம் முழுவதும் நாயகன் மலையாளம் கலந்த தமிழில் பேசுவது ஏனோ படத்திலிருந்து நம்மை தள்ளி வைக்கின்றன. மற்றபடி படத்தின் மேக்கிங் மற்றும் கதை மாந்தர்களின் பங்களிப்பு என்பது சிறப்பாக அமைந்து படத்தை கரை சேர்க்க முயற்சி செய்திருக்கிறது.

நாயகன் ஷேன் நிகாம் கோவக்கார இளைஞராக நடிப்பில் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார். அதேசமயம் கோபப்பட்டாலும் அப்பாவியான இளைஞராகவும் தன் உடல் ஆகிய அனைத்தையும் கொடுத்து நடித்திருக்கிறார். நாயகி நிஹாரிகாவுக்கு ஒரு பாடல் சில பல காட்சிகள் மட்டுமே படத்தில் இருக்கிறது. தனக்கு கொடுத்த இந்த சிறிய ஸ்பேசில் எந்த அளவு சிறப்பு செய்ய முடியுமோ அந்த அளவு செய்து விட்டு சென்று இருக்கிறார். படத்தில் வில்லன் மற்றும் இன்னொரு நாயகனாக வரும் கலையரசன் தனக்கு என்ன வருமோ அதையே இந்த படத்திலும் செய்து படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறார். இவரின் கதாபாத்திரமும் கதையில் இருக்கும் இவரது பங்களிப்பும் படத்திற்கு பிளஸ் ஆக அமைந்து இன்னொரு நாயகனாகவும் மாறி இருக்கிறார். நாயகனுக்கு மாமாவாக வரும் கருணாஸ் படம் முழுவதும் வருகிறார். வழக்கம்போல் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்து இருக்கிறார். குணச்சித்திர கதாபாத்திரத்தில் மிளிர்கிறார்.

Advertisement

ஐஸ்வர்யா தத்தாவுக்கு சிறிய வேடம். ஆனால் சிறிது நேரமே வந்தாலும் சிறப்பாக பங்களிப்பை கொடுத்திருக்கிறார். மற்றபடி படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. அவர்கள் அனைவருமே அவரவருக்கான வேலையை சிறப்பாக செய்து இருக்கின்றனர். சாம் சி எஸ் பின்னணி இசை வழக்கம் போல் சத்தமாகவே இருக்கிறது. வழக்கம்போல் வாசித்து தள்ளி இருக்கிறார். பிரசன்னாவின் ஒளிப்பதிவில் புதுக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் திருமணம் மற்றும் காதல் சடுகுடு பாடல் சம்பந்தப்பட்ட காட்சிகள் நேர்த்தியாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.

எப்பேர்பட்ட ஒற்றை வரி கதையையும் சிறந்த திரைக்கதை மூலம் தேற்றி ஒரு நல்ல படமாக கொடுத்து ரசிக்க வைக்க முடியும். அதேபோல் அதே திரைக்கதையை வைத்துக்கொண்டு நல்ல கதை அம்சம் கொண்ட படத்தையும் சுமாரான படமாகவும் மாற்ற முடியும். திரைக்கதை என்பது இருமுனை கத்தி போன்றது, அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே அது நமக்கு சாதகமாக அல்லது பாதகமாக மாறும். அந்த வகையில் கதை ஆரம்பித்து போக போக கதைக்குள் செல்லாமல் எங்கெங்கோ திரைக்கதை பயணித்து பல்வேறு திருப்பங்களுடன் புதிய கதை மாந்தர்கள் அறிமுகமாகி பின் அவர்கள் மூலமாக படம் முடியாமல் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து கதை முடிவது என்பது படத்திற்கு பெரும்பாலும் நல்லது செய்யுமா என்றால் சந்தேகமே!

மெட்ராஸ்காரன் – சூழ்நிலை கைதி!

Advertisement