நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 12/01/2025 | Edited on 12/01/2025

சினிமாவை தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் ஆர்வம் கொண்ட அஜித், அதிலும் நேரம் கிடைக்கும் போது கவனம் செலுத்தி வருகிறார். 2003ஆம் ஆண்டு ஃபார்முலா ஆசிய பிஎம்டபள்யூ சேம்பியன்ஷிப், 2010ல் ஃபார்முலா 2 சேம்பியன்ஷிப் உள்ளிட சில போட்டிகளில் போட்டியிட்டார். இதைத் தொடர்ந்து எந்த கார் ரேசிலும் பங்கேற்காமல் இருந்த அஜித் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கார் ரேஸில் கலந்து கொண்டுள்ளார். இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கி கடந்த சில மாதங்களாகப் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

24ஹெச் துபாய் 2025, ஐரோப்பியன் 24ஹெச், போர்சே 992 ஜிடி3 கார் ஆகிய பந்தயங்களில் அஜித் மற்றும் அவரது அணி போட்டியிடுகிறது. அதன்படி முதலாவதாக துபாயில் நேற்று (11.01.2025) முதல் நடைபெற்று வரும் 24ஹெச் பந்தயத்தில் அஜித் கலந்து கொண்டார். இந்நிலையில் துபாய் கார் பந்தயம் 992 பிரிவில் நடிகர் அஜித்குமாரின் அணி  3ஆவது இடம் பிடித்தது. இதனையடுத்து நடிகர் அஜித்துக்கு திரையுலகினர் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் அஜித்துக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ 24 எச் துபாய் 2025 இல் 991 பிரிவில் அஜித்குமார் மற்றும் அவரது குழுவினர் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளனர் என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த குறிப்பிடத்தக்கச் சாதனைக்காக அஜித்குமார் மற்றும் அவரது குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மதிப்புமிக்க பந்தய நிகழ்வில் திராவிட மாடல் அரசின் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை காட்சிப்படுத்தியதற்காக நன்றி கூறுகிறேன். நமது தேசத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் மென்மேலும் பெருமை சேர்ப்பதற்கு அஜித் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்.