நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 18/01/2025 | Edited on 18/01/2025

சுந்தர்.சி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகி 10 ஆண்டுகளுக்கு மேல் வெளியாகாமல் கிடப்பில் இருந்த ‘மதகஜராஜா’ படம் கடந்த பொங்கலை முன்னிட்டு கடந்த 12ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் சந்தானம், சோனு சூட், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி ஆகியோர்களுடன் மறைந்த நடிகர்களான மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்துள்ள இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்த நிலையில் படக்குழு சர்பில் நன்றி தெரிவிக்கும் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு படம் குறித்து நிறைய விஷயங்கள் பேசினர். அப்போது சுந்தர்.சி. பேசுகையில், “பொதுவாக என்னுடைய எந்த படத்துக்கும் சக்சஸ் மீட் வைத்தது கிடையாது. படம் வெற்றி பெற்றவுடன் அடுத்த படத்துக்கு சென்று விடுவேன். கடைசியாக அரண்மனை 4 படத்துக்கு கூட கேட்டாங்க, பண்ணவில்லை. ஆனால் இந்த படம் பெரிய சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. மற்ற படங்களை விட இந்த படம் ஒரு ஸ்பெஷல். 13 வருடம் கழித்து ரிலீஸாகியிருக்கிறது. மக்கள் அதரவு இந்தப் படத்திற்கு கிடைத்தது. அவர்களுக்கு நான் திருப்பி கொடுப்பது நன்றியும் சில சொட்டு கண்ணீரும்தான்” என்றார். பின்பு படக்குழுவினரை பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து ஒவ்வொருவருக்கும் நன்றி கூறினார். 

Advertisement

அப்போது விஷால் குறித்து கூறுகையில், “என் தம்பி பட்ட கஷ்டங்கள் வெளியில் சொல்ல முடியாது. ஒரு நாள் அவருடைய ட்ரைவர் ஃபோன் பண்ணி சார்(விஷால்) மயங்கி கிடைக்கிறார் என்றார். அந்தளவு உடலை வருத்திக் கொண்டு கஷ்டப்பட்டார். இப்போது மக்கள் கொடுக்கும் ஆதரவு, விஷாலுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லுவேன். உண்மையாக நேர்மையாக ஒரு உழைப்பை போட்டால் ஆண்டவனும் மக்களும் நம்மை கைவிடமாட்டார்கள்” என்றார். 

இதே நிகழ்ச்சியில் மேடையில் இருக்கும் திரையில் மீம் போடப்பட்டு அதற்கு படக்குழுவினரின் ரியாக்‌ஷன் குறித்து கேட்டு அறியப்பட்டது. அப்போது சுந்தர்.சி-யை பற்றி ஒரு மீம் போடப்பட்டது. அந்த மீமில் கமர்ஷியல் சினிமா என்றால் சுந்தர்.சி.தான் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை பார்த்த சுந்தர்.சி. சந்தோஷப்பட்டதோடு வருத்தப்படுவதாகவும் கூறினார். அவர் பேசியதாவது, “கமர்ஷியல் படங்கள் பெரிய வெற்றி அடையும். ஆடியன்ஸ் கூட்டம் கூட்டமாக வந்து ரசிப்பார்கள். ஆனால் எனக்கு உள்ளே ஒரு ஃபீலிங் இருக்கும். அதில் பெரிய பாராட்டுகள் இருக்காது. ஒரு நல்ல இயக்குநர்கள் என லிஸ்ட் போட்டால், அதில் என் பெயர் இருக்காது. 30 வருஷம் மக்களின் ஆதரவினால் நான் இன்னும் ஓடிக்கொண்டு இருக்கிறேன். இருந்தாலும் எனக்கான சரியான இடம் கிடைக்கவில்லை என நினைப்பதுண்டு. அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. மக்களை சந்தோஷப்படுத்துவது தான் என் நோக்கம்” என்றார்.