
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 20/01/2025 | Edited on 20/01/2025

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அஜித் குமார், த்ரிஷா நடித்துள்ள படம் விடாமுயற்சி. இவர்களுடன் ரெஜினா, அர்ஜுன், ஆரவ், நிகில் நாயர், தசரதி, கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் ‘சவதீகா…(Sawadeeka)’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் பொங்கல் வெளியீடாக அறிவிக்கப்பட்டு பின்பு விலகியது. அதற்கு காரணமாக காப்புரிமை இருப்பதாக கூறப்பட்டது. இப்படம் 1997ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ‘பிரேக்டவுன்’ படத்தின் தழுவலாக இருப்பதாக பேசப்பட்ட நிலையில் பிரேக்டவுன் படக்குழுவினர் லைகா நிறுவனத்திடம் தங்களிடம் அனுமதி பெறாமல் ரீமேக் செய்யப்பட்டுள்ளதாக கூறி ரூ.100 கோடிக்கும் மேல் பணம் கேட்டுள்ளதாக கடந்த மாதம் தகவல் வெளியானது. அது தொடர்பான பேச்சு வார்த்தை பல நாட்களாக நடந்து வந்த நிலையில் தற்போது சுமுகமாக முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. மேலும் அடுத்த மாதமான பிப்ரவரி 6ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக ட்ரைலரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் படத்தின் இரண்டாவது பாடல் ‘பத்திக்குச்சி’ நேற்று வெளியானது. இப்பாடலை அனிருத் மற்றும் யோகி சேகர் இருவரும் பாடியிருக்க விஷ்ணு எடவன் எழுதியிருக்க ராப் போர்ஷன்களை அமோக் பாலாஜி எழுதியுள்ளார். இப்பாடல் எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையை விட்டுவிடக்கூடாது என்பதை குறிக்கும் வகையில் வில்லன்களுடன் ஹீரோ கடைசி வரை போராடும் சூழ்நிலையை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதற்கேற்றவாறு ‘ரத்தம் ஒரு சொட்டு மிச்சம் இருந்தாலும் என்னைக்கும் விடாமுயற்சி…’, வானத்தையே கிழிச்சிட்டு எவன் குதிச்சாலும் சாவுக்கு பயமில்லை வெடிக்கட்டும் போர்…’ போன்ற வரிகள் இடம் பெற்றுள்ளது. யூட்டுயூபில் வெளியான இப்பாடலின் லிரிக் வீடியோ 2 மில்லியனுக்கு மேலான பார்வையாளர்களை கடந்து மியூசிக் ட்ரெண்ங் லிஸ்டில் தற்போது நம்பர் 1 இடத்தில் உள்ளது.