இலங்கை
சீனாவின் முதலீடுகளால் இலங்கைக்கு ஆபத்தே! கடன்சுமைகள் அதிகரிக்கும் இந்தியத் தூதுவர் எச்சரிக்கை

சீனாவின் முதலீடுகளால் இலங்கைக்கு ஆபத்தே! கடன்சுமைகள் அதிகரிக்கும் இந்தியத் தூதுவர் எச்சரிக்கை
நாடொன்றின் நிலைபேறான எதிர்காலத்தை உறுதிப்படுத்தாத சீனாவின் முதலீடுகளால், கடன் சுமைகளே அதிகரிக்கும் என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்றுமுன்தினம் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஸ் ஜா, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போதே, சீனாவின் முதலீடுகள் மற்றும், சீனத் தூதுவரின் உள்ளக விவகாரத் தலையீடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புவதில் இந்தியா ஆர்வமும் அக்கறையும் கொண்டுள்ளது. எதிர்காலத்தில் வடமாகாணத்தில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுப்பதில் இந்தியா தொடர்ந்தும் செயற்படும். இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒரு பிரதேசத்தின் அல்லது ஒரு நாட்டின் எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்டு நிலைபேறான அபிவிருத்தியை அடைவதை இலக்காகும். இந்தியாவைப்போன்றே அமெரிக்கா, மேற்குலக நாடுகள் ஆகியனவும் செயற்படுகின்றன.
ஆனால், சீனாவைப் பொறுத்தவரையில் அவர்களின் முதலீட்டுத் திட்டங்கள் விரைவாக முன்னெடுக்கப்படுவதோடு அவை நிலைபேறான இலக்குகளை பெரிதாக மையப்படுத்துவதில்லை. ஆகவே சீனாவின் நிலைபேறற்ற முதலீடுகள் எந்தவொரு நாட்டையும் அதீதமான கடன்சுமைக்குள்ளேயே கொண்டு செல்லும்.
இலங்கைக்கான சீனத்தூதுவர் யாழ்ப்பாணத்தில் வைத்து, ‘ஜனாதிபதி அநுரகுமார தலைமயிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மக்கள் வாக்களித்தமையை வரவேற்கின்றேன்’ என்று கூறியிருந்தமை தவறான முன்னுதாரணமாகும். தூதுவர்கள் தூதரக நெறிமுறைகள் மற்றும் இராஜதந்திர வரைமுறைகளின் அடிப்படையில் மக்களாணை தொடர்பில் கருத்துக்கூற முடியாது. அவ்வாறு கூறினால், அதுவொரு உள்ளகத் தலையீடு – என்றார்.
குறித்த சந்திப்பின்போது, ஜனாதிபதி அநுரகுமாரவின் அரசாங்கத்தில் ராஜபக்சக்களை விடவும் படுமோசமான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.