இலங்கை
படையினரின் சில ஆயுதங்கள் பாதாளக் குழுக்களின் வசம்!

படையினரின் சில ஆயுதங்கள் பாதாளக் குழுக்களின் வசம்!
நாட்டில் பயங்கரமான நிலைமை ஆயுதங்களை மீட்பதாக அநுர சூளுரை
இராணுவத்தினர் வசம் இருந்த சில ஆபத்தான ஆயுதங்கள், பாதாளக் குழுக்களிடம் சென்றுள்ளன. அத்துடன், பாதாளக் குழுக்களிடம் பணம்பெற்று துப்பாக்கிச்சூடு நடத்துபவர்களும் இராணுவத்துக்குள் இருக்கவே செய்கின்றனர் – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
களுத்துறையில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
‘பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உட்பட பொலிஸாரின் தலையீட்டுடன் இலங்கை வரலாற்றில் அதிகளவான போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. பணம் மற்றும் ஆயுதங்கள் என்பனவும் மீட்கப்பட்டு வருகின்றன.
நாட்டிலுள்ள பயங்கரமானதொரு நிலை தொடர்பான தகவலொன்றை வெளியிடுகின்றேன். இராணுவ முகாம்களில் உள்ள ஆயுதங்கள் வெளியில் வந்துள்ளன. குறிப்பாக இராணுவ முகாமொன்றிலிருந்து 73 ரி56 துப்பாக்கிகள் பாதாள குழுக்கள் வசம் சென்றுள்ளன. அவற்றில் 38 துப்பாக்கிகளை நாம் மீளக் கைப்பற்றியுள்ளோம். எஞ்சிய 35 துப்பாக்கிகளைத் தேடிவருகின்றோம்.
இராணுவத்தில் சிறப்பாக செயற்படக்கூடிய, புகழ்பெற்ற அதிகாரிகள் இருக்கும் நிலையில், பாதாள குழுக்களுக்காக வேலை செய்யும் சிலரும் இருக்கவே செய்கின்றனர். பாதாள குழுவிடம் பணத்தை பெற்றுவிட்டு சூடுநடத்திவிட்டு முகாம்களுக்குள் செல்பவர்களும் இருக்கின்றனர். இப்படியான 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதாள குழுக்களுக்கு இடமில்லை. எல்லாவற்றையும் நாம் சுத்தம் செய்வோம். அர்ப்பணிப்புடன் செயற்படும் பொலிஸார் இருக்கின்றனர். அவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளோம் – என்றார்.