இலங்கை
பாவற்குளத்தின் 4 வான்கதவுகள் நேற்றுத் திறப்பு! மக்களே அவதானம்

பாவற்குளத்தின் 4 வான்கதவுகள் நேற்றுத் திறப்பு! மக்களே அவதானம்
அளவுக்கு அதிக நீர்வரத்துக் காரணமாக பாவற்குளத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ஆதலால், பொதுமக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வவுனியாவில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகின்றது. இதையடுத்தே பாவற்குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என்று வவுனியா மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது. தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகின்றமையால், மேலும் பல வான்கதவுகள் திறக்கப்படும் சாத்தியங்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாவற்குளத்தில் நீர்வழிந்தோடும் பகுதிகளில் உள்ள கந்தசாமி நகர், கிறிஸ்தவகுளம், பாவற்குளம் படிவம் 5, 6, 4, 2, 1, வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களும், நெளுக்குளம் – நேரியகுளம் வீதி ஊடாக பயணிப்பவர்களும் கூடுதல் அவதானமாக போக்குவரத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.