
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 21/01/2025 | Edited on 21/01/2025

சத்யராஜ் மகளான திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறார். ‘மகிழ்மதி’ என்ற இயக்கத்தின் மூலம், கடந்த 4 வருடங்களாக தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்கி வருகிறார்.
இதனிடையே சமீபத்தில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ‘ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தரும் கட்சி என்றால் அது திமுக. அதற்கு உதாரணம் முதல்வரின் காலை உணவு திட்டம். நான் ஊட்டச்சத்து நிபுணராக உள்ளேன். குறிப்பாக பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கட்சி என்றால் திமுக தான். அதற்கு உதாரணம் புதுமை பெண்கள் திட்டம். எல்லா மதங்களுக்கும் மரியாதை தரும் கட்சியும் திமுக என்பதால் திமுகவில் இணைந்துள்ளேன். அப்பா என்னுடைய தோழர் என்பதால் அவர் எப்பொழுதும் எனக்கு பக்க பலமாக இருப்பார். திமுக தலைவர் என்ன பொறுப்பு கொடுக்கிறாரோ அந்த பொறுப்பில் கடுமையாக உழைப்பேன்” என அவர் தெரிவித்த்திருந்தார்.
இந்த நிலையில் சத்யராஜ், தனது மகள் தி.மு.க.-வில் இணைந்தது குறித்து தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “என் அன்பு மகள் திவ்யா, திராவிட முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்து கொண்டதற்கு என்னுடைய மகிழ்ச்சிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழியில் சமூக நீதி கோட்பாட்டில் சமரசமின்றி வெற்றிநடை போட மனமார வாழ்த்துகிறேன்” என பேசினார்.