விளையாட்டு
Champions Trophy: இடது கை பேட்டர்கள் எங்கே? நம்பர் 8-ல் ஆடப்போவது யார்? அஸ்வின் சரமாரி கேள்வி

Champions Trophy: இடது கை பேட்டர்கள் எங்கே? நம்பர் 8-ல் ஆடப்போவது யார்? அஸ்வின் சரமாரி கேள்வி
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. பிப்ரவரி 19 ஆம் தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும், முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரின் முக்கியமான இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் பிப்ரவரி 23 ஆம் தேதி அமீரகத்தில் உள்ள துபாயில் நடக்க உள்ளது. இந்தப் போட்டிக்கு முன் பிப்ரவரி 20 ஆம் தேதி வங்கதேசத்தையும், மார்ச் 2 ஆம் தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது.இந்திய அணி அறிவிப்பு இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (ஜன.18) அன்று ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணியை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் மூத்த தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் இணைந்து அறிவித்தனர். இந்த அணிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்திய அணியில் பும்ரா, ஷமி, குலதீப், ஸ்ரேயாஸ் ஆகியோர் இடம் பிடித்துள்ளார்கள். அதே சமயம் விஜய் ஹசாரே தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. மேலும், டி20 அணியில் தொடக்க வீரராக களம் இறங்கி வரும் சஞ்சு சாம்சனுக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. அஸ்வின் கேள்வி இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணிக்கு இரண்டு முக்கிய கேள்விகளை எழுப்பி இருக்கிறார் இந்திய மூத்த சுழற்பந்துவீச்சாளரான தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின். அவர் இந்தியவின் பேட்டிங் வரிசையில் இடது கை பேட்டர்கள் எங்கே? எனவும், நம்பர் 8-ல் ஆடப் போவது யார்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மூத்த பத்திரிகையாளர் விமல் குமாருடன் தனது ‘ஆஷ் கி பாத்’ உரையாடலின் போது, அஸ்வின் பேசுகையில், “இந்த டெம்ப்ளேட் 2023 ஒருநாள் உலகக் கோப்பையை பிரதிபலிக்கிறது. ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். அவர்கள் இருவரும் வலது பேட்ஸ்மேன்கள். அடுத்து விராட் கோலி வருவார். அவருக்குப் பின், உலகக் கோப்பையில் தனது வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், ஷ்ரேயாஸ் ஐயர் 4-வது வீரராக பேட் செய்ய வாய்ப்புள்ளது. தொடர்ந்து கே.எல் ராகுல் களமிறங்குவார். ஆங்கிலத்தில் படிக்கவும்: R Ashwin on India’s Champions Trophy playing XI: Where are your left-handed batters and who is your No 8?இங்கு குறிப்பாக பார்க்க வேண்டியது 6வது இடம் தான். அந்த இடத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் என யாரவது ஒருவர் களமிறங்கலாம். ஹர்திக் 7வது இடத்தில் ஆடுவார். அப்படி பார்க்கும் போது, இந்திய அணியின் டாப் 7 வீரர்களில் இடது கை பேட்டர்கள் ரொம்பவே குறைவு தான். ஆடும் லெவன் அணிக்கு வெளியே, நம்மிடம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் மட்டுமே உள்ளனர். அணியில் யாராவது காயம் அடைந்தால் மட்டுமே ஜெய்ஸ்வால் விளையாடுவார். இங்கிலாந்துக்கு எதிராக அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அவர் தொடர்ந்து சதம் அடித்தால் என்ன செய்வது?. இதற்கு ஒரு வழி தான் இருக்கிறது. நீங்கள் ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித்தை தொடக்க வீரர்களாக களமிறங்க வேண்டும்.சுப்மனை 3-வது இடத்திலும், விராட் கோலியை 4-வது இடத்திலும் இறங்கி வந்து ஆட சொல்ல வேண்டும். இப்போது, 5-வது இடத்தில் ரிஷப் பண்ட் அல்லது கே.எல் ராகுலை ஆட வைக்கலாம். ஜெய்ஸ்வால் விளையாடினால், ஸ்ரேயாஸ் ஐயரை பெஞ்சில் உட்கார வைக்க வேண்டும். அதற்கு சாத்தியமில்லை என்றாலும், ஜெய்ஸ்வாலின் தற்போதைய ஃபார்மை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.மற்றொரு வாய்ப்பாக வாஷிங்டன் சுந்தர் உள்ளார். நான் அவருக்கு ஆதரவாக பேசவில்லை. ஆனால் கவுதம் கம்பீர் அவரது சிறப்பான பேட்டிங் காரணமாக வாஷிங்டனை மிகவும் மதிக்கிறார். அவரை அவ்வப்போது பயன்படுத்தலாம். நீங்கள் உலகக் கோப்பை வடிவமைப்பைப் பின்பற்றினால், நீங்கள் 6-வது இடத்தில் ஜடேஜா அல்லது அக்சர், 7வது இடத்தில் ஹர்திக் மற்றும் 8வது இடத்தில் வாஷிங்டனை விளையாடலாம். இது மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் அல்லது குல்தீப் மற்றும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள், ஹர்திக்கின் ஆல்ரவுண்ட் திறமைகளுடன் சமநிலையை கொண்டுவர அனுமதிக்கிறது.தற்போது நடைபெற்று வரும் ஐ.எல்.டி20 போட்டியில், ஒவ்வொரு போட்டியிலும் பனி ஒரு முக்கிய காரணியாக உள்ளது. அதனால், இந்தியா மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடும் ரிஸ்க்கை எடுக்குமா? என்று பார்க்க வேண்டும். ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுக்குப் பதிலாக நிதிஷ் குமார் ரெட்டியை இந்தியா பரிசீலித்திருக்க வேண்டும். வாஷிங்டன் 8-வது இடத்தில் பேட் செய்தால், அது பேட்டிங்கை பலவீனப்படுத்துகிறது. வெறுமனே, அவர் 8-வது இடத்தில் பேட் செய்ய வேண்டும். நிதிஷ் ரெட்டி போன்ற ஒரு வீரரை இந்த திட்டத்தில் வைத்திருப்பதில் அர்த்தம் உள்ளதா? குல்தீப் 9-வது இடத்தில் விளையாடினால், அது இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் என்று ஆகிவிடும். எனவே, நிதிஷ் 8-வது இடத்தில் பேட்டிங் செய்தால், குல்தீப் 9-வது இடத்திலும் மற்ற இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் அடுத்தடுத்தும் ஆட அனுமதிக்கலாம். இது நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் என்ற சமநிலையை அணிக்கு வழங்கும். ஆனால், நிதிஷ் பரிசீலிக்கப்பட்டாரா என்று எனக்குத் தெரியவில்லை.குல்தீப் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக 9-வது இடத்தில் உள்ளார். விரல் சுழற்பந்து வீச்சாளர்களில், ஒரு வேகப்பந்து வீச்சாளர் இடம்பிடித்திருக்கலாம் என்று நினைக்கிறேன். விவாதங்கள் நடந்திருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். கே.எல்.ராகுல் ஒருநாள் மற்றும் உலகக் கோப்பை ஆட்டங்களில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதனால் அவரை ஆடும் லெவனில் இருந்து ஒதுக்குவது கடினம். அப்படி இருக்கும் பட்சத்தில், எனது ஆடும் லெவன் வீரர்களைப் பொறுத்தவரை, ரோகித் மற்றும் கில் தொடக்க வீரர்கள். விராட் கோலி, ஷ்ரேயாஸ் 3 மற்றும் 4-வது இடத்தில் இறங்க வேண்டும். 5-வது இடத்தில் கே.எல் ராகுல் அல்லது பண்ட், 6 இடத்தில் ஜடேஜா மற்றும் அக்சர் ஆகிய இருவரில் ஒருவரை இறக்கலாம். 7-வது இடத்தில் ஹர்திக் ஆட வேண்டும்.பனி ஒரு முக்கிய காரணியாக இருந்தால் வாஷிங்டன் சுந்தர் 8வது இடத்தில் களமிறக்கப்பட சாத்தியமில்லை. அப்படியானால், குல்தீப் யாதவ் 8-வது இடத்தில் பேட்டிங் செய்வார். அவருக்குப் பின் அர்ஷ்தீப், பும்ரா மற்றும் ஷமி ஆகியோரை களமிறக்கலாம். 2023 உலகக் கோப்பையில், 8-வது இடம் முதல் அணியில் பேட்டிங் ஆட திறமையான வீரர்கள் இல்லை. அதனால், இவைதான் தீர்க்கப்பட வேண்டிய முக்கியமான கேள்விகளாக உள்ளன.” என்று அஸ்வின் கூறியுள்ளார். ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அஸ்வின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்: ரோகி த் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா அல்லது அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.