இலங்கை
அரசியற்கைதிகளை உடன் விடுவிக்குக – மனோகணேசன் எம்.பி. கோரிக்கை!

அரசியற்கைதிகளை உடன் விடுவிக்குக – மனோகணேசன் எம்.பி. கோரிக்கை!
பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும். அத்துடன் அரசியற்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் நிறைவேற்றப்படுவதுதான் உண்மையான ‘தூய இலங்கை’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று அவர் மேலும் தெரிவித்ததாவது:
நீதி அமைச்சர், ‘நாட்டில் அரசியற்கைதிகள் இல்லை’ எனக் கூறியுள்ளார். அவரின் இந்தக் கருத்துத் தொடர்பில் கவலையடைகின்றேன். ‘மைத்திரி – ரணில்’ ஆட்சியிலும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. அதற்கு நான் கடும் எதிர்ப்பை அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் வெளிப்படுத்தினேன். அதைத் தொடர்ந்து அரசியற்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
ஜே.வி.பி. என்பது ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியாகும். எனவே பிரச்சினைகளும், அரசியற்கைதிகள் தொடர்பிலும் அவர்களுக்குப் போதிய அளவுக்குத் தெரியும். இதைப் பட்டுணர்ந்த தரப்பினரே நாட்டில் அரசியற்கைதிகள் என எவரும் இல்லை என்று இன்று கூறுகின்றனர். அதுதான் கவலையான விடயமாகும்.
அரசியற்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கலாம், தடுப்புக்காவல் வழங்கப்பட்டிருந்தால் அதை மீளப்பெறலாம், அரசியற்கைதிகளை விடுவிப்பதற்குப் பல வழிகள் உள்ளன. விடுவிக்க வேண்டும் என்று சிந்தித்தால் விடுவிக்க முடியும் -என்றார். (ப)