இலங்கை
கனமழை காரணமாக 20 குடும்பங்கள் பாதிப்பு!

கனமழை காரணமாக 20 குடும்பங்கள் பாதிப்பு!
வவுனியாவில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கனமழை காரணமாக 20 குடும்பங்களைச் சேர்ந்த 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக வவுனியாவில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சி தருகின்றன. இதுவரை 20 குடும்பங்களைச் சேர்ந்த 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாவற்குளம், இராசேந்திரங்குளம், ஈரப்பெரியகுளம், முகத்தான்குளம், மருதமடுக்குளம் மற்றும் கல்மடு அணைக்கட்டு என்பன நீர்வரத்து அதிகரித்தமையால் தொடர்ந்தும் வான் பாய்ந்து வருகின்றன. இதனால், வெள்ளப் பேரிடர் நிலை மேலும் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வவுனியா அரச அலுவலகங்களுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ப)