இலங்கை
14 தமிழ்க் கட்சிகளின் சந்திப்பு இன்று!

14 தமிழ்க் கட்சிகளின் சந்திப்பு இன்று!
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று நடைபெறும் என்று தெரியவருகின்றது.
இந்தச் சந்திப்பு நேற்றுமுன்தினம் நடைபெறுவதாக இருந்தநிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர், இந்தச் சந்திப்புத் தொடர்பாகத் தமது கட்சிக்கு அழைப்புக் கிடைக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
அதையடுத்து இந்தச் சந்திப்பைத் தள்ளிவைத்து, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு முறையான அழைப்பொன்றை அனுப்புவது என்று ஏற்பாட்டாளரான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது என்று தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி இந்தச் சந்திப்பு இன்று நடைபெறும் என்று தெரிகின்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் முயற்சிலேயே இந்தச் சந்திப்பு நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தை எடுத்தால், தமிழ்த் தரப்புக்கள் அதை ஓரணியில் எதிர்கொள்ளும் முயற்சியாக இந்த நகர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.