
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 28/01/2025 | Edited on 28/01/2025

ஷங்கர் – ராம்சரண் கூட்டணியில் வெளியான கேம் சேஞ்ஜர் படம் அதிக காட்சிகள், அதிக டிக்கெட் கட்டணம் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அதை எதிர்த்து தெலுங்கானா உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் மனுதாரரின் சார்பில், “தாமதமான நேரங்களில் திரைப்படங்களைப் பார்க்க சிறார்களை அனுமதிக்கக் கூடாது என்றும், அப்படி பார்த்தால் அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் வாதம் வைக்கப்பட்டது.
இதையடுத்து மனு தொடர்பாக உத்தரவிட்ட நீதிமன்றம், காலை 11 மணிக்கு முன்பும் இரவு 11 மணிக்குப் பிறகும் திரையரங்குகள் மற்றும் மல்டிபிளெக்ஸில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நுழைவதை ஒழுங்குபடுத்துவது குறித்து சம்மந்தப்பட்டவர்கள் கலந்தாலோசித்து அனைவருக்கும் அறிவுறுத்தல்களை வழங்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் அத்தகைய முடிவு எடுக்கப்படும் வரை, 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இரவு 11 மணிக்குப் பிறகு திரைப்படங்களைப் பார்க்க அனுமதிக்கக் கூடாது எனவும் கூறியுள்ளது.
உத்தரவிற்கு முன்பு சமீபத்தில் ‘புஷ்பா-2’ கூட்ட நெரிசலில் ஒரு பெண் சிக்கி உயிரிழந்து, அவரது மகன் கோமாவில் சிகிச்சை பெற்று வரும் போதிலும் அதிகாலை 2 மணிக்கு காட்சிக்கு மாநில அரசு அனுமதி வழங்கியதை அடுத்து நீதிமன்றம் அரசை கடுமையாக கண்டித்தது.