உலகம்
ChatGPT இற்கு சவாலாக வந்துள்ள சீனாவின் DeepSeek!

ChatGPT இற்கு சவாலாக வந்துள்ள சீனாவின் DeepSeek!
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சீனாவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் ChatGPT உள்ளிட்ட செயலிகளை சீன செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக் (DeepSeek) பின்னுக்கு தள்ளியுள்ளது. அதிகம் வரவேற்பை பெற்ற இலவச செயற்கை நுண்ணறிவு (AI) செயலியாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது.
சீன செயலிக்கு அதிகரிக்கும் வரவேற்பு, செயற்கை நுண்ணறிவு தொடர்புடைய அமெரிக்க நிறுவனங்களின் பங்குகள் விற்பனையை பின்தள்ளியுள்ளது. இதனால் என்விடியா, மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா ஆகிய பெருநிறுவனங்களின் பங்குகள் திங்கட்கிழமை வீழ்ச்சியடைந்தன. இது ஐரோப்பிய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் அமெரிக்காவை விஞ்ச முடியாது என்ற பரவலான நம்பிக்கைக்கு சவால் விடும் வகையில், அறிமுகமான முதல் நாளில் இருந்தே இச்செயலி பிரபலமடைந்து வருகிறது. இதனால் அமெரிக்க நிறுவனங்கள் இந்தத் துறையில் செய்ய திட்டமிட்டிருக்கும் முதலீடுகளின் அளவு குறித்து கேள்விகளையும் எழுப்பியுள்ளன.
இது (Open Source AI Model Deepseek V3) மாடலால் செயல்படுகிறது. இதை உருவாக்க 6 மில்லியன் டொலர்களைவிட குறைவான தொகையே செலவானதாக அதன் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தத் தொகை அதன் போட்டியாளர்கள் செலவிட்ட பல பில்லியன் டொலர்களைவிட கணிசமான அளவு குறைவு.
ஆனால் இந்த கூற்றை இத்துறையில் இருக்கும் ஏனையோர் மறுக்கிறார்கள்.
செயற்கை நுண்ணறிவிற்கு தேவையான உயரிய சிப் தொழில்நுட்பத்தை சீனாவிற்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்துவரும் சூழலில்தான் டீப்சீக்சின் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
உயரிய தொழில்நுட்பத்துடனான இறக்குமதி செய்யப்பட்ட சிப்கள் சீராக கிடைக்காத நிலையில், சீன செயற்கை நுண்ணறிவு வல்லுநர்கள் தங்களது பணியை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துகொண்டதுடன், அந்த தொழில்நுட்பம் தொடர்பான புதிய அணுகுமுறைகளையும் முயற்சித்திருக்கின்றனர்.
இதனால் முன்பைவிட குறைவான அளவே கணினி ஆற்றல் தேவைப்படும் செயற்கை நுண்ணறிவு மாடல்கள் உருவாகியுள்ளன. இதற்கு முன்பு நினைத்ததைவிட குறைவாகவே செலவாகும் என்பதால், இந்த துறை மேம்பட வாய்ப்புகள் உள்ளன.