பொழுதுபோக்கு
ரீ-ரிலீஸ் முயற்சியில் பராசக்தி: சிவகார்த்திகேயன் படத்திற்கு திடீர் சிக்கல்; நேஷ்னல் பிச்சர்ஸ் முக்கிய அறிவிப்பு!

ரீ-ரிலீஸ் முயற்சியில் பராசக்தி: சிவகார்த்திகேயன் படத்திற்கு திடீர் சிக்கல்; நேஷ்னல் பிச்சர்ஸ் முக்கிய அறிவிப்பு!
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர் நடித்து வரும் படத்திற்கு பராசக்தி என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இந்த பெயரை யாரும் பயன்படுத்த வேண்டாம். பராசக்தி படத்தை டிஜிட்டல் முறையில் வெளியிடும் பணி நடைபெற்று வருவதாக 1952-ம் ஆண்டு அந்த படத்தை தயாரித்த நேஷ்னல் பிச்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.பி.ஏ.பெருமாள் முதலியார் என்பவரால் தொடங்கப்பட்ட நிறுவனம் நேஷ்னல் பிச்சர்ஸ். இந்த நிறுவனத்தின் மூலம் 1952-ம் ஆண்டு முதல் படமாக பராசக்தி படம் தொடங்கப்பட்டது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நாயகனாக அறிமுகமான இந்த படத்திற்கு, கலைஞர் கருணாநிதி வசனம் எழுதியிருந்த நிலையில், எஸ்.எஸ்.ராஜேந்திரன், கண்ணதாசன் ஆகியோர் நடிகர்களாக இந்த படத்தில் அறிமுகமாகி இருந்தனர். அந்த காலக்கட்டத்தில முன்னணி இயக்குனர்களாக இருந்த கிருஷ்ணன் பஞ்சு இந்த படத்தை இயக்கியிருந்தனர்.1952-ம் ஆண்டு பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான பராசக்தி படமும், அதில், சிவாஜி கணேசன் பேசிய வசனங்களும், பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றிருந்தது. சிவாஜி கணேசன் திரையுலகில் அறிமுகமான முதல் படம் என்ற அடையாளத்தை பெற்றுள்ள பராசக்தி படத்தின் தலைப்பை தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர் நடிப்பில் தயாராகி வரும் படத்திற்கு வைத்துள்ளனர். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டைட்டில் டீசர் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.மேலும் இந்த படத்திற்கு தலைப்பிற்காக, ஏ.வி.எம். நிறுவனத்திடம் என்.ஓ.சி. வாங்கிவிட்டதாகவும் கூறப்படும் நிலையில், விஜய் ஆண்டனி தனது படத்திற்கு தமிழில் சக்தி திருமகன் என்று பெயரிட்டு, ஆங்கிலத்தில் பராசக்தி என்று பெயரிட்டுள்ளார். இதனால் இவர்கள் இருவரில் யாருக்கு அந்த டைட்டிலை பயன்படுத்த உரிமை உள்ளது என்ற சந்தேகம் பலமாக எழுந்துள்ள நிலையில், இது குறித்து கேள்விகள், சமூகவலைதளங்களில் குவிந்து வருகிறது. ஆனால், பராசக்தி படத்தை தயாரித்த நேஷ்னல் பிச்சர்ஸ் நிறுவனம் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், பராசக்தி படத்தை வேறு யாரும் பயன்படுத்தாதீர்கள். எங்களுக்கு உரிமையான பராசக்தி படத்தின் தலைப்பை வேறு யாரும் தங்கள் திரைப்படத்திற்கு தலைப்பாக பயன்படுத்துவதை தவிர்த்துவிட வேண்டும். பராசக்தி படத்தை டிஜிட்டல் முறையில் மேம்படுத்தி வெளியிடும் பணியை தொடங்க இருக்கிறோம் என்று நேஷ்னல் பிச்சர்ஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.