இலங்கை
சட்டவிரோத விகாரைக்கு காணியை தாரைவார்க்க தையிட்டி மக்கள் தயார்!

சட்டவிரோத விகாரைக்கு காணியை தாரைவார்க்க தையிட்டி மக்கள் தயார்!
வடக்கு ஆளுநர் தெரிவிப்பு!!
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் மாற்றுக்காணிகளைக் கேட்டார்கள் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியிருந்தார். இந்தவிடயத்தில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்த விடயத்தில் ஜனாதிபதி கருத்துத் தெரிவிக்க முன்னதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கட்டப்பட்ட விகாரையை அகற்ற முடியாது என்றும், அந்தக் காணிகளின் உரிமையாளர்கள் மாற்றுக்காணிகளைப் பெற்றுக்கொள்ள சம்மதித்துள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார். தங்கள் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் செயலரும், தற்போதைய ஆளுநருமான நா.வேதநாயகன் தெரிவித்திருந்த கருத்து விமர்சனங்களைத் தோற்றுவித்திருந்தது. இந்தப் பின்னணியில் நேற்று வடக்கு மாகாண ஆளுநர் திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
காணியின் உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, காணியின் உரிமையாளருடன் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டிருந்தது.
திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் விகாரைக்குச் சொந்தமான அயலில் உள்ள காணியை மாற்றீடாகத் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்தச் சந்திப்பில் விகாரை தற்போதுள்ள காணி தனியாருக்குச் சொந்தமானது என்று தெரிவித்த அவர்கள் அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தனர். திஸ்ஸ விகாரைக்குரிய காணி பிறிதொரு இடத்தில் அமைந்துள்ளதையும் தெளிவுபடுத்தினர்.
விகாரை தற்போது அமைந்துள்ள காணிக்கு மேலதிகமாகவும் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த காணி உரிமையாளர்கள், அந்தக் காணியை விடுவித்துத் தருவதுடன் விகாரைக்குச் சொந்தமான அயலிலுள்ள காணியையும் மாற்றீடாகத் தமக்கு வழங்க வேண்டும் என்று கோரினர்.
காணி உரிமையாளர்களின் கோரிக்கைக்கு அமைய இதுதொடர்பாக விகாராதிபதியுடனும், நயினாதீவு விகாராதிபதியுடனும் பேச்சு நடத்தப்படுகின்றது. இந்த இணக்கப்பாடு யோசனை தொடர்பாக புத்தசாசன அமைச்சின் கவனத்துக்கும் கொண்டு செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – என்றுள்ளது.